புதன், 9 நவம்பர், 2016

நூறு ரூபாய் நோட்டு! - பதற்றத்தில் பன்னீர்… சசிகலா சொன்ன அட்வைஸ்!

minnambalam.com “நேற்று இரவு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தபோது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தம்பிதுரையும் மட்டும்தான் அப்பல்லோவில் இருந்தார்கள். முதல் தளத்தில் இருந்த ரிசப்சனில் வழக்கம்போல அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கிறார்கள். அப்பல்லோ டாக்டர் ஒருவர்தான் பரபரப்புடன் வந்து இருவரிடம் அந்த தகவலைச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான் இருவரும் சற்று அதிர்ச்சியுடன் போய் டி.வி.யை பார்த்திருக்கிறார்கள்.
‘இது எப்படி சாத்தியமாகும்?’ என்றுதான் முதலில் பன்னீர் கேட்டிருக்கிறார். அதற்கு தம்பிதுரை, ‘அதான் தெளிவா சொல்லியிருக்காங்களே…’ என்று அதிர்ச்சி மாறாமல் பதில் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு இருவருமே சற்றுநேரம் யாரிடமோ போனில் பேசியிருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் டாக்டர் சிவகுமார் கீழே வந்து, அவர்கள் இருவரை இரண்டாவது தளத்துக்கு அழைத்திருக்கிறார்.
இருவரும் மேலே போயிருக்கிறார்கள். இரண்டாவது தளத்தில் உள்ள ரிசப்சனில் இருவரும் காத்திருந்தபோது, சற்றுநேரத்துக்குப் பிறகு சசிகலா வந்திருக்கிறார். அவரும் இதுதொடர்பாக இருவரிடமும் ஏதோ டிஸ்கஷன் செய்ததாகச் சொல்கிறார்கள். சசிகலா பேசியபோதும் பன்னீர், அதிர்ச்சியிலிருந்து விலகாதவராகவே இருந்தார் என்றுதான் சொல்கிறார்கள். சசிகலா கேட்டதுக்கெல்லாம் தம்பிதுரைதான் விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறார். அப்போது உடனிருந்த டாக்டர் சிவகுமாரும் சில தகவல்களைச் சொன்னாராம். மூத்த ஆடிட்டர் ஒருவருக்கு தம்பிதுரை அங்கிருந்தபடியே போன் செய்து பேசிவிட்டு மேலும் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். சசிகலாவும் சில அட்வைஸ்களை சொல்ல, அதை கேட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். வழக்கமாக, 10 மணி வரை மருத்துவமனையில் இருக்கும் பன்னீரும் தம்பிதுரையும் நேற்று இரவு 9 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“மற்ற அமைச்சர்கள் எல்லாம் என்ன நினைக்கிறார்கள்?” என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டது ஃபேஸ்புக்.
பதிலை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். “அமைச்சர்கள் பெரும்பாலும் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு என ஆளுக்கொரு தொகுதியில் இருந்தார்கள். எல்லோருமே வாக்கு சேகரித்தபடி இருந்தபோது இந்தத் தகவல் போயிருக்கிறது. ஷாக் ஆகாதவர்களே இல்லை. அதுவும் ஒரு அமைச்சர், ‘நான் உடனே சென்னைக்கு கிளம்புறேன். நாளைக்கு ஒரு நாள் மட்டும் பார்த்துக்கோங்க… நான் வந்துடுறேன்’ என்று சொல்லிவிட்டு, நேற்று இரவோடு இரவாக தஞ்சாவூரிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டாராம். இங்கே வீட்டிலிருக்கும் பணத்தையெல்லாம் எப்படி மாற்றுவது என தீவிர டிஸ்கசன் நடந்திருக்கிறது. தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள், சொந்தபந்தங்கள் என எல்லோருக்கும் போன் அடித்துவிட்டாராம் அந்த அமைச்சர். இன்னும் ஒரு மூத்த அரசியல்வாதியோ, ‘எனக்கு எந்தக் கவலையும் இல்லப்பா… நான் எல்லாத்தையும் வெளிநாட்டுலதான் முதலீடு செஞ்சிருக்கேன். எனக்கு வெளிநாட்டுல 13 கம்பெனிகள் இருக்கு. அதுவழியாத்தான் எனக்கு வருமானம் வருது!’ என்று சொல்லியிருக்கிறார். அந்த அரசியல்வாதிக்கு வெளிநாட்டில் 13 கம்பெனிகள் இருப்பதுபோல கணக்கு மட்டும்தான் இருக்கிறதாம். பெயருக்காக அப்படி கணக்கு வைத்திருக்கிறாராம். மற்றபடி, கம்பெனி எதுவும் வெளிநாட்டில் இல்லை என்கிறார்கள்.
எப்போதும் பணம் புழங்குவதாகச் சொல்லும் ஒரு மூத்த அரசியல்வாதி, ஒரு லட்ச ரூபாய் கைக்கு வந்தாலும் அதை உடனடியாக சொத்தாக மாற்றிவிடுவாராம். அவரது வீட்டில் சோதனை போட்டாலும் பத்தாயிரத்துக்குமேல் தேறாதாம். நேற்று அறிவிப்பு வந்தபோது, அந்த அரசியல்வாதி பாக்கெட்டில் இருந்த 200 ரூபாயை எடுத்துக்காட்டி, ‘இது மட்டும்தான் என்கிட்ட இருக்கு!’ என்று சிரித்திருக்கிறார். இவரைப்போல, அரசியலில் பழுத்த பழமாக இருப்பவர்கள் எல்லாம் விவரமாகத்தான் இருக்கிறார்கள். புதிதாக அமைச்சரானவர்கள், புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் பாடுதான் படு திண்டாட்டமாகிவிட்டதாம். சம்பாதித்த பணத்தை இன்னும் முதலீடுகூட செய்யாமல் பணமாகவே பதுக்கி வைத்திருந்தார்களாம். அதை என்ன செய்வது… எப்படி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மாற்றுவது என்ற குழப்பத்தில், ஆடிட்டர்களைப் பார்த்து பேசிவருகிறார்களாம் அவர்கள்!” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது.
படித்துவிட்டு, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டது. “தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு அதிமுக பணத்தை அனுப்பிவிட்டது. வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கவரையும் தயார் செய்துவிட்டார்கள். இந்த சிக்கலுக்குப்பிறகு ஆளுங்கட்சியிலிருந்து, ‘அந்தப் பணத்தை கொடுக்க வேண்டாம். வெய்ட் பண்ணுங்க. நூறு ரூபாய் நோட்டு வரும்!’ என்று தகவல் வந்திருக்கிறதாம்.’’ என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை: