வெள்ளி, 11 நவம்பர், 2016

பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பா.ஜ.க பாசிசம் !


வினவு :ப
ழங்குடி மக்களின் மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் டெல்லி பல்கலைகழக பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது சத்தீஸ்கர் அரசு. அவருடன் சேர்த்து ஜே.என்.யூ பல்கலைகழக பேராசிரியை அர்ச்சனா பிரசாத், சமூக செயற்பாட்டாளர் விநித் திவாரி, சி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் பரடே ஆகியோர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது சத்தீஸ்கர் அரசு.
பழங்குடிமக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கு உருவாக்கப்பட்ட சால்வாஜூடும் என்ற கொலைகார கூலிப்படையை அம்பலப்படுத்தியவர் நந்தினி சுந்தர். இவர் தொடுத்த வழக்கில் தான் சல்வா ஜூடும் எனும் அரசின் கூலிப்படையையும், சிறப்பு காவல் படை என்ற பெயரில் பழங்குடியினரை கூலிப்படையாக பயன்படுத்தப்படுவதை கலைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இதே போன்று கடந்த 2011-ம் ஆண்டில் சுக்மா மாவட்டத்தில் பழங்குடிமக்களின் 160 வீடுகளை கொளுத்தி பாதுகாப்பு படையினர் வன்முறை வெறியாட்டம் போட்டதை மைய புலனாய்வு அமைப்பு (CBI) கடந்த மாதம் உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பாதுகாப்பு படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் இழைத்துவரும் வன்முறை வெறியாட்டத்தில் இத்தாக்குதல் மிக மிக சிறியது தான் என்றாலும் இதற்காக சட்டபோராட்டம் நடத்தி அதை நிரூபித்தவர் நந்தினி சுந்தர்.
அரசு சுயவிளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.முன்னர் மாவோயிஸ்டுகள் தான் மக்களின் வீடுகளை எரித்ததாக கூறிய போலீசார் தற்போது சண்டையினால் அப்பகுதியில் வெப்பம் அதிகமாகி வீடுகள் தானாக எரிந்ததாக கூறுகிறார்கள். இப்படியான விளக்கத்தை அளித்திருப்பவர் பஸ்தர் சரக ஐ.ஜி கலூரி.பாதுகாப்பு படையினரின் அட்டூழியங்கள் ஆதாரத்துடன் வெளியானதும், உச்சநீதிமன்றம் அதை ஆதரித்திருப்பதும் சத்தீஸ்கர் அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுதியிருந்தது.
effigies of social worker 1
தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக நந்தினி சுந்தர், பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியம், சமூக செயற்பாட்டாளர்கள் ஹிமான்சு குமார், மனிஷ் குஞ்சம் ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து போலிசு படை ஆர்ப்பாட்டம்
தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக நந்தினி சுந்தர், பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியம், சமூக செயற்பாட்டாளர்கள் ஹிமான்சு குமார், மனிஷ் குஞ்சம் ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து கடந்த மாதம் சிறப்பு காவல் படையினர் போராட்டம் நடத்தினார்கள். வழக்கமாக சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிராக உருவபொம்மை எரிப்பது வழக்கம் ஆனால் முதல் முறையாக போலீஸ் படை, சமூக செயற்பாட்டாளர்களின் உருவ பொம்மையை எரித்திருக்கிறார்கள். தங்களது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வதுடன், இவர்களுக்கு உதவகூடாது என்று மக்களுக்கு மறைமுக எச்சரிக்கை செய்யும் விதமாகவும் இப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
இப்பகுதியில் மாவோயிஸ்டு புரட்சியாளர்களுக்கு எதிராகவும், பழங்குடிமக்களின் நலனுக்கு போராடும் ஹிமான்சு குமார் போன்ற காந்தியவாதிகளுக்கு எதிராக செயல்பட பல பதிலி(proxy) அமைப்புகளை உருவாக்கி இயக்கிவருகிறது சத்தீஸ்கர் அரசு. அவ்வமைப்புகள் மூலம் போராட்டங்கள் என்ற பெயரில் வீட்டிற்கு சென்று மிரட்டுவது, காவல்துறையில் பொய்வழக்குகள் பதிவு செய்வது பஸ்தார் பகுதில் தொடர்ந்து நடந்துவருகிறது. பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியம், ஜகதால்பூர் சட்ட உதவி மையம் அமைப்பினர் சமஜிக் ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பினரால் அச்சுறுத்தப்பட்டதையும், சிலர் முடக்கப்பட்டதையும் முன்னர் எழுதியிருந்தோம். இந்தியா டுடே நடத்திய இரகசிய நடவடிக்கையில் சமஜிக் ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பிற்கும் காவல்துறைக்கும் உள்ள தொடர்பு காமிராவில் அம்பலமாகியுள்ளது
பழங்குடி மக்களுக்கு எதிரான போலீசின் கொலை,கொள்ளை, பாலியல் வல்லுறவுகளை வெளிக்கொணரும் சமூக செய்ற்பாட்டாளர்களை குறிவைத்து முடக்குவது தான் இவர்களின் நோக்கம். இந்த பின்னணியில் தான் நந்தினி சுந்தர் உள்ளிட்டவகள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.
தற்போது கொலை செய்யப்பட்டுள்ள பெக்ஹல் என்பவரும் இது போன்ற போலீஸ் உருவாக்கிய ’கோடாரி’ என்ற அமைப்பை சேர்ந்தவர். அவரின் மூலம் கடந்த மே மாதம் நந்தினி சுந்தர் உள்ளிட்டவர்கள் மீது மாவோயிஸ்டுகளை ஆதரித்து பேசியதாகவும், அரசுக்கு எதிராக தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கும் நந்தினி சுந்தர் தான் காரண்ம் என்கிறது சத்தீஸ்கர் அரசு.
நாட்டின் அறிவுஜீவிகள் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவரான ஒருவர் மீதே துணிந்து பொய் வழக்கு சோடிக்கப்படுகிறது என்றால் காடுகளில் பழங்குடிகள் மீது போலீஸ் வேட்டைநாய்களின் கொலை,கொள்ளை,பாலியல் வன்முறைகள் எந்த அளவுக்கு கேள்விக்கிடமற்ற வகையில் நிகழ்த்தப்படும் என்பதை புரிந்துகொள்ளலாம். பழங்குடிகள் ஏன் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களை ஆதாரிக்கிறார்கள் என்பதற்கான பதிலும் இதில் இருக்கிறது.
நந்தினி சுந்தர், அவரது கணவர் சித்தார்த் வரதராஜன் போன்று அரசு அமைப்புக்குள்ளாகவே தீர்வு இருப்பதாக நம்பும் சில  அறிவுஜீவிகளைக் கூட பா.ஜ.க பாசிஸ்டுகள் விட்டு வைக்கவில்லை. பழங்குடி மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தமைக்காக இவர்கள் மீது கொலை வழக்கு போடுகிறார்கள் என்றால் நம் நாடு எத்தகைய அபாயகரமான காலகட்டத்திற்கு நுழைந்திருக்கிறது என்பதறியலாம்.

கருத்துகள் இல்லை: