அமரர். திரு.அ.அமிர்தலிங்கம் : இந்த திட்டத்தை டெல்லி சென்று நேரில் கையளித்ததோடு பல மணித்தியாலங்கள் வெளிநாட்டு அமைச்சரின்
செயலாளரோடும் ஏனைய அதிகாரிகளோடும் உரையாற்றினோம்.
எமது முயற்சி விரும்பிய பயனைக் கொடுத்தது. இந்திய அரசின் போக்கில மீன்டும் எமக்குச் சார்பான மாற்றம் தோன்றியது.
"இலங்கை அரசின் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி விரிவான ஆக்கப்பூர்வமான மாற்று திட்டத்தைக் கொடுத்திருக்கின்றது' - என்று பத்திரிகைகளுக்குக் கூறிய திரு ராஜீவ் காந்தி, டாகாவில் கூடிய தெற்காசிய பிராந்திய மகாநாட்டில் ஜனாதிபதி ஜயவர்த்தனாவிடம் அதை நேரில் கையளித்தார். எமது திட்டத்தை முற்றாக நிராகரித்து, ஜனவரி 30-ம் திகதி இலங்கை அரசு ஓர் விரிவான பதிலைக் கொடுத்தது.
இந்த பதில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இலங்கை அரசின் உண்மையான போக்கைக் காட்டிக்கொடுத்தது. அவருக்கு மேலும் விளக்கம் கொடுக்கும் பொருட்டு ஓர் சந்திப்பை நாடினோம். திருவையாறு தியாகையர் உற்சவத்தோடு தென்பிராந்திய கலாச்சார நிலையத்தை அவர் திறந்து வைத்துத் திரும்பிச் செல்லும் போது நாமும் உடன் விமானத்தில் சென்று . விரிவாகப் பேச நேரம் கொடுத்தார்.
நானும் திரு சிவசிதம்பரம், திரு. சம்பந்தன் ஆகிய மூவரும் திருச்சி சென்று அங்கிருந்து டெல்லி வரை இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அவரோடு விமானத்தில் உரையாடினோம். வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்ற அவருக்குத் தவறான கருத்து தரப்பட்டிருந்தது. வட மகாணமும் கிழக்கு மாகாணமும் தொடரான நிலப் பரப்பல்ல என்று கூறப்பட்டிருந்தது. அந்தத் தப்பான கருத்தைத் தெளிவுபடுத்தினோம்.