முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய புகார் தொடர்பாக, சி.பி.ஐ., விரைந்து விசாரணையை நடத்தி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
"2 ஜி ஸ்பெக்ட்ரம்' விவகாரம் சூடு பிடிப்பதற்கு முன், கடந்த 2004ம் ஆண்டு, தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதிக்கு வழங்கப்பட்ட, சென்னை தொலைபேசியின் 323 இணைப்புகளை, முறைகேடாக "சன் டிவி' நிறுவனத்திற்கு பயன்படுத்தியதாக, சி.பி.ஐ., கண்டுபிடித்து, கடந்த 2007 செப்.,ல் தொலைத் தொடர்பு துறை அமைச்சகத்திற்கு தெரிவித்தது. ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை, "போர்ட் கிளப்'பில் உள்ள அவரது வீட்டிலிருந்து, 3.4 கி.மீ., தொலைவில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செயல்பட்ட "சன் டிவி' நிறுவனத்திற்கு, அந்த 323 இணைப்புகளும்,"ஆப்டிக் பைபர் கேபிள்' மூலம் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதோடு, இணைப்புகள் அனைத்தும் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் என்ற பெயரில் வழங்கப்பட்டிருந்தது எனவும், சி.பி.ஐ., அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.