புதன், 22 ஜூலை, 2026

கைதான திமுக எம்எல்ஏக்களை நேரில் சென்று சந்திக்காத உதயநிதி: குமுறும் கட்சி நிர்வாகிகள்

dinamalar.com  : திமுக எம்எல்ஏக்கள், அடுத்தடுத்து கைது செய்யப்படும் நிலையில், அவர்களை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேரில் சென்று சந்திக்காதது, திமுக நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
முதல்வர் விஜயை, ஒருமையில் விமர்சித்ததாக, முன்னாள் அமைச்சரும் திருச்செந்துார் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 'முதல்வர் விஜயின் எலும்பை உடைப்பேன்' என பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த இரு கைது சம்பவங்களுக்கும், திமுக தலைவர் ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் அறிக்கை வெளியிட்டதோடு, முடித்துக் கொண்டனர்.



சொந்த கட்சி எம்எல்ஏக்களுக்கே, இந்த நிலைமையா என, கட்சிக்குள் அதிருப்தி அதிகமாகி வருகிறது. கட்சி தலைமையில் இருந்து ஆதரவு இல்லையென்றால், தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் பேசவே மாட்டார்கள்.
மூன்றாவது கட்சியாக இருக்கும் அதிமுக கூட, போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி, களத்தில் இறங்காமல் வெறும் அறிக்கை மட்டும் தான் வெளியிடுகிறார்.

திமுக ஆட்சியின்போது, சிவகங்கையில் போலீஸ் காவலில் உயிரிழந்த அஜித்குமாருக்காக, முதல்வராகும் முன், தவெக தலைவராக, சென்னையில் விஜய் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால், தவெக ஆட்சியில், நாகர்கோவிலில் நீதிமன்ற காவலில் சபரி வர்மன் உயிரிழந்தது, பெரும் பரபரப்பான போதும், உதயநிதி வரவில்லை.

சென்னைக்கு அருகே கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கிய போது கூட, உதயநிதி வெளியே வரவில்லை.

ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தான், திமுகவின் முகமாக முன்னிறுத்தப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை கூட உணராமல் இருந்தால், அவரை நம்பி கட்சியினர் எப்படி களத்தில் இறங்குவர்?

இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

கருத்துகள் இல்லை: