தஞ்சையில் ஆகஸ்டு 5 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில் “விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை” என்ற தலைப்பில் தோழர் மாறன், மக்கள் அதிகாரம், தேவாரம், அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.
இந்திய விவசாயத்திற்கு ஏராளமான பாரம்பரியம் உண்டு என்று இந்திய அரசே சொல்கிறது. உலகில் காய்கறி ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது பெரிய நாடு. கோதுமை ஏற்றுமதியில் ஐந்து நாடுகளில் ஒன்று. காபி, தேயிலை , பால் ஏற்றுமதியில் முக்கியமான இடத்தில் உள்ளது இந்தியா. இவை எல்லாம் விவசாயிகளின் சொந்தமான சொத்து.
1886-இல் அகஸ்தர் ஒல்கர், இந்தியாவிற்கு விவசாய ஆய்விற்காக வருகிறார். அனைத்து மாநில விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்து எழுதுகிறார். நேரடி ஆய்வில் இந்திய விவசாயிகள் படிக்காதவர்கள் தான். அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. பருவமழை நீரை கொண்டு சிறப்பாக அறுவடை செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று எழுதினர்.