Viruvirupu,
தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் வீட்டில் கைப்பற்றப்பட்டவை
அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) என்று வருமான
வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து 5 பத்திரங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு பத்திரத்தின் மதிப்பு சுமார் ஒரு பில்லியன்
டாலர்.புத்தாண்டு பிறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், வருமான வரி துறை அதிகாரிகள் தாராபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்கத்தின் வீட்டுக்குள் புகுந்தனர். பல மணி நேர சோதனைக்குப் பிறகு, அவரது வீட்டுக்குள் இருந்த ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 27,500 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து அவர் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த டி.எம்.ராமலிங்கம் என்பவர், தாராபுரத்தைச் சேர்ந்த சாதாரண கொப்பரை மற்றும் நிலக்கடலை வியாபாரி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் என்ற கிராமத்தில் நிலக்கடலை வியாபாரம் செய்கிறார் இவர்.
அத்துடன் இவர் ஒன்றும் கோடீஸ்வர குடும்ப பின்னணி உடையவரும் அல்ல. பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர்தான் இவரது சொந்த ஊர். அங்குள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராமலிங்கம், நிலக்கடலை தொழில் செய்வதற்காக, கடந்த 94-ம் வருடம் தாராபுரம் பகுதிக்கு குடிபெயர்ந்தவர்.
நிலக்கடலையும் தேங்காயும்தான் ராமலிங்கத்தின் அப்போதைய பிசினஸ். சாதாரணமான ஓட்டு வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு, பைக்கில் சென்றுதான் வியாபாரம் செய்து வந்தார். திடீரென காட்சிகள் மாறின.
உப்புத்துறைபாளையத்தில் பெரிய வீடு ஒன்றை கட்டினார். பல லட்சங்களைப் போட்டு சொகுசு காரையும் வாங்கி வீட்டுக்கு முன் நிறுத்தினார்.