பெங்களூரு: பெங்களூரில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞர் சந்தோஷ் பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். கல்லூரி மாணவரான இவரை கிரி நகரில் வைத்து ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குல் வீடியோ பல்வேறு கன்னட டிவி சானல்களில் ஒளிபரப்பாகியுள்ளன. தற்போது பெரும் பரபரப்பாக வலம் வரும் இந்த வீடியோவில் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் சந்தோஷ் தனது பேஸ்புக்கில், காவிரிப் போராட்டம் தொடர்பாக போட்ட பதிவுதான் அவர் தாக்குதலுக்குள்ளாக காரணம் என்று கூறப்படுகிறது.
நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன் குறித்தும், கன்னட திரையுலகினரின் போராட்டத்தையும், தமிழ் நடிகர்களையும் ஒப்பிட்டு அவர் கருத்து போட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் சந்தோஷைத் தாக்கியதாக கூறப்படுகிறது.