மீட்பரின் புதிய சீடர் வருகை
முதல்நாள் முதல் காட்சியில் ‘பயணம்’ திரைப்படத்தைப் பார்ப்பேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. ஏற்கெனவே ‘மொழி’, ‘அபியும் நானும்’ தந்த கடும் மனச்சிக்கலில் இருந்து, ராதா மோகனின் இன்னொரு செண்டிமெண்ட் இண்டெலெக்சுவல் காமெடிக் கொடுமையைக் காணத் துணியவில்லை. அலுவலகத்தில் நண்பர்களோடு சேர்ந்து போகலாம் என்று முடிவானதும் ஒரு சின்ன நப்பாசை ஒட்டிக்கொண்டது. ராதா மோகன் மட்டுமே தற்காலத் தமிழ் நாட்டின் தலைசிறந்த இயக்குநர் என்ற முடிவுக்கு, ராதா மோகனின் முதல் படம் வருவதற்கு முன்பே வந்துவிட்ட பாராவும் உடன் வருகிறார் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். வேலை இருக்கிறது என்ற ஒரு வரியில் பாரா ஒதுங்கிக்கொண்டார் இன்று. நான் படத்துக்குப் போனேன். அங்கே கடவுளும் சைத்தானும் ஒன்று சேர்ந்து டிக்கெட் கிழித்தார்கள்.
பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டுப் படத்துக்குச் செல்லும்போது யுனிஃபார்முடன் செல்வதுபோல, நான் கிழக்கு டி ஷர்ட்டுடனும் உள் நெஞ்சில் ‘வேலையை விட்டுட்டு படம் பார்க்க வந்திருக்கமே’ என்னும் குறுகுறுப்புடனும், ராதா மோகனின் மொக்கை மீது முன்முடிவுடனும் உட்கார்ந்துகொண்டிருந்தபோது, நாகார்ஜூனா என்று திரையில் ஓடியது. அடுத்து பிரம்மானந்தம் என்று வந்தது. இது தமிழ்ப்படமா டப்பிங் படமா என்ற சந்தேகமும் என் குறுகுறுப்புடன் சேர்ந்துகொண்டது. கூடவே நாகார்ஜூன் நம்மைக் காப்பாற்றுவார் என்னும் சிறிய சந்தோஷமும் சேர்ந்துகொண்டது.
படத்தை அதன் பாராட்டுப் பத்திரத்திலிருந்து துவங்கிவிடலாம். இடைவேளை வரை மிக பலவீனமான திரைக்கதை எளிதில் ஊகிக்கக்கூடிய மொக்கை காட்சிகள், நாலாந்தர செண்டிமெண்ட் காட்சிகள், நேரத்தை வீணடிப்பதற்காகவே அநாவசியமாகச் சேர்க்கப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சி, தீவிரவாதிக்கு உதவியனைப் பிடிக்கும் காட்சி என நீண்டு சலிக்கும் காட்சிகள், இந்தப் படம் எப்ப முடியும் என்கிற டென்ஷனை எகிற வைத்தன. இதில் போதாக்குறைக்கு இது டப்பிங் படம்தான் என்ற முடிவுக்கு வரவைக்கும் வாயசைப்புப் பிரச்சினை. ஒரே ஆறுதல் காந்த நடிகரும், பாலாஜியும் வரும் காட்சிகள்தான். இப்படிப் போய்கொண்டிருந்த படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் நாகார்ஜுனாவும் பிரம்மானந்தமும். இடைவேளைக்குப் பிறகு காட்சிகள் வேகம் பெறுகின்றன. வழக்கம்போல ஆனந்தவிடகன் ஜோக் போன்ற வசனங்கள்தான் என்றாலும், சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. ஓர் ஆக்ஷன் படத்துக்குத் தேவையான நிமிடப்பரபரப்பும் சேர்ந்துகொள்கிறது. சுகர் வந்து இளைத்துப் போகாத கவுண்டமணியான பிரம்மானந்தத்தின் அனாயசமான யதார்த்தமான ரீயாக்ஷனும், நாகார்ஜுனாவின் அடக்கமான நடிப்பும், திகைக்க வைக்கும் சில காமெடி காட்சிகளும் (குறிப்பாக ‘என்ன கதகளியா ஆடற’ என்று பிரம்மானந்தம் கேட்கும் காட்சி) நம்மை வசீகரிக்கின்றன. சாதாரண மனிதர்களை உச் கொட்ட வைக்கும் க்ளிஷே காட்சிகள் அமைக்கும் களன்கள் கூர்மை பெறுகின்றன. கடைசியில் எப்படி நாகார்ஜுனா பயங்கரவாதிகளை முறியடிக்கிறார் என்பது கதை.
பாராட்டவேண்டிய இன்னொரு விஷயம் பிரகாஷ்ராஜ். பிரகாஷ் ராஜ் என்றாலே ஓவர் ஆக்டிங் என்கிறது என் அகராதி! அவர் நடித்து நான் ரசித்த ஒரே ஒரு திரைப்படம் காஞ்சிவரம் மட்டுமே. இப்போது இந்தப் படம். எந்த இடத்திலும் கொணட்டல்கள் இல்லை. அதீத முகபாவம் இல்லை. அதிலும் குறிப்பாக, அவர் கோபம் கொண்டு கத்தும் காட்சி, அவரது நடிப்பின் உச்சம். தான் தயாரிக்கும் படம் என்பதால் தன் காட்சிகளை அதிகம் வைத்துக்கொள்ளவில்லை என்பதற்கும் சேர்த்துப் பாராட்டலாம். (பிரகாஷ் ராஜை நான் பாராட்டுவேன் என நான் நினைத்ததே இல்லை.)
பிறகு என்னதான் இந்தப் படத்தில் பிரச்னை? அரசியல். ராதா மோகனின் அரசியல். கமலை மிஞ்சுகிறார். ராதா மோகனின் படங்களில் கிறித்துவ சார்பு உண்டு என்பதும், ஃபீல் குட் என்ற பெயரில் வரும் செண்டிமெண்ட் மொக்கைகளும், ஆனந்தவிகடனில் இருந்து பொறுக்கி எடுத்தாரோ என்று ஐயம் கொள்ள வைக்கும் சொறி விட்டுகளைத்தான் காமெடியாகத் தருகிறார் என்பதும், ராதா மோகன் மீது எனக்கு ஏற்பட்டிருந்த முன் தீர்மானத்துக்கு அடிப்படைகள். இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பட்டமான கிறித்துவப் படம். சார்பு என்ற சொல்கூட அநாவசியம். முதல் காட்சியிலிருந்து பாதிரியார் தொடங்கும் அன்புப் புராணஅதிதீவிர காவியம், என்ட் கார்டு வரையில் நம்மைத் துரத்து துரத்து என்று துரத்துகிறது. மொழி திரைப்படத்தில் வரும் பாஸ்கர்தான் பாதிரியாராக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அக்கதாபாத்திரத்தின் தொடர்ச்சிதான் இக்கதாபாத்திரமோ என்ற சந்தேகமே நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. பாதிரியார் இப்படத்தில் ராதா மோகன் வழியே செய்திருக்கும் சாதனை, காண்டம் என்னும் சொல்லைப் பயன்படுத்தியதுதான். மலையாளப் படங்களில் இப்படிப் பேசும் தோழமையான பாதிரிகளைப் பார்த்திருக்கிறேன். தமிழில் இது தொடக்கமாக இருக்கலாம். இந்தப் பாதிரிப் புராணத்தில் மூச்சு முட்டி ஓடுபவர்களுக்கு எதிரில் காத்திருக்கிறது ஹிந்து மத அரசியல் நிந்தனை. நேரடியாகவே பாஜகவைத் திட்டியிருக்கலாம் ராதா மோகன். பாப்ரி மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியா ‘பால் வரும் தேன் வரும் பூமியாக’ இருந்ததை எல்லோருமே அறிந்திருந்தார்கள். ஆதியில் இந்தியா அப்படித்தான் இருந்தது. ராதா மோகன் இந்தப் படத்தில் அதனை மீண்டும் நினைவூட்டுகிறார். அவரே ஒரு கதாபாத்திரமாக வருகிறார் என்னும்போது அவர் பேசும் வசனங்கள் இன்னும் ‘அர்த்தம்’ பெறுகின்றன. அவர் பெயரையே அதாவது ‘இயக்குநர் ராதா மோகன்’ என்றே இப்படத்தில் காட்டியிருக்கலாம். இப்படி எதிரே நளினமாக ஆடும் ஹிந்துத் தாக்குதலில் மேலும் மூச்சு முட்டும்போது ‘இருவாசல் மூடி ஒரு வாசல் வைப்பான் இறைவன்’ என்று நம்மை ஆசுவாசப்படுத்துகிறார் ராதா மோகன். ஆம், இதுவரை தமிழ்த் திரை காணாத அளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தின் காட்சிகளை நெடுகிலும் காட்டிச் செல்கிறார்.
அதிலும், ஒரு பயங்கரவாதி தான் அன்பாகப் பேசிய குழந்தையிடம் வெடிகுண்டை மறைப்பது அதன் உச்சம். ராதா மோகன் இப்படி எல்லாம் எடுக்கமாட்டாரே என்று இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்வைத்து ஹிந்துத்துவாதிகளும், அதே இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பை முன்வைத்து முற்போக்காளர்களும் குழம்பும்போது, கிறித்துவர்கள் மட்டும்தான், மீட்பர் அனுப்பியிருக்கும் புதிய சீடரின் வருகையை நினைத்து மயிர்க்கூச்செறிதலுடன் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள். இதில் படத்தின் கடைசி சட்டகத்தில் உறையும் காட்சி முக்கியமானது. அதுவரை நமக்கு இருந்துவரும் சந்தேகங்களை எல்லாம் அறவே நீக்குவது. படத்தில் வரும் ஹிந்து நிந்தனைக் காட்சிகள்கூட சப்பைக்கட்டுத்தானோ என்று சந்தேகம் கொள்ள வைப்பது. ஐந்து பயங்கரவாதிகளின் பிணங்கள் மீதும் அவரது பெயர்கள் நிலைபெறுகின்றன. ஐந்தும் இஸ்லாமியப் பெயர்கள். (இனி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட முற்போக்காளர்கள் இங்கிருந்து தொடங்கிக் கொள்ளவேண்டும்!)
கமலாவது ‘உன்னைப் போல் ஒருவனில்’ ஒரு கடத்தல் தாதாவையாவது ஹிந்து எனக் காட்டினார். அந்த ‘இரக்கம்’கூட ராதாமோகனுக்கு இல்லை. அத்தனையும் இஸ்லாமியப் பெயர்கள். வெடிகுண்டை விமானத்தினுள்ளே கடத்திப் போக உதவியரும் இஸ்லாமியராம். என்ன அநியாயம் பாருங்கள். தீவிரவாதிகளின் புனிதப் போர்ப் பெயர்க்காரணமாக ஒரு வசனம் வருகிறது. எந்தப் பொண்ணையாவது நாங்க கை வெச்சோமா என்று. இதற்கு இஸ்லாமியர்கள் வருத்தப்படவேண்டுமா, சந்தோஷப்படவேண்டுமா என்று திகைக்க வைக்கிறார் இயக்குநர். இன்னொரு விஷயம், நாகார்ஜுனாவின் உதவியாளராக வருவது ஓர் இஸ்லாமியர். எங்கே அவரும் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்று காட்டி ராதாமோகப் பூனைக்குட்டி வெளியே வந்துவிடுமோ என்று பயந்தேன். அல்லது அவர்தான் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளைக் கொன்றார் என்று காட்டி செக்யூலர் பூனை வெளிவருமோ என்று ஆர்வத்துடன், ஆம், மீண்டும் பயந்தேன். இரண்டுமே நடக்கவில்லை. இப்படி நிகழாததில் ஒரு நுண்ணரசியல் உள்ளது. என்ன அந்த நுண்ணரசியல்? குழப்பமும் உள்ளது. என்ன அந்தக் குழப்பம்?
ரஜினிகாந்த் போன்ற பஞ்ச் டயலாக் கமர்சியல் உச்ச நடிகர்களை ஆதி முதல் அந்தம் வரை போட்டுத் தாக்குகிறார் ராதா மோகன். ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்விதத் தொய்வும் இல்லாமல் வந்துகொண்டே இருக்கும் ஒரே விஷயம் இது மட்டுமே. இடையிடையே வரும் இரண்டு நிமிட செண்ட்டிமெண்ட் அறுவைக் காட்சிகள்கூட இதைப் போலத் தொடர்ந்து வருவதில்லை. ஆனால் கடைசி காட்சியில், அதுவரை வந்த அத்தனை விமர்சனங்களையும் போட்டு நொறுக்கும் வகையில், அந்த நடிகர் வீரராகிறார். இப்படி ஒரு மாற்றம் இஸ்லாமியர்களின் வாயிலாக நடப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனை ராதா மோகன் செய்யவில்லை. இது நுண்ணரசியலா அல்லது ஸ்கிரிப்டா?
பொதுவாக ஹிந்துத்துவச் சார்பு உள்ள எனக்கு இந்தப் படத்தின் மூலம் வந்த சந்தோஷங்கள் என்ன என்ன?
01. எல்லாப் படத்திலும் மெல்லிய கிறித்துவச் சார்பை பின்னணியில் வைத்து பார்வையாளர்களை, அவர்கள் அறியாமலே தன்னரசியலுக்குப் பயன்படுத்தும் அல்லது தான் நம்பும் சூடோ செக்யூலரிசத்துக்கும் பயன்படுத்தும் ராதா மோகனின் முகமூடி கிழிகிறது. அவர் இனி நேரடியாகவே கிறித்துவ ஆதரவுத் திரைப்படம் எடுக்கலாம்.
02. ஹிந்து அரசியல் தவறுகளைச் சொல்லும் ராதா மோகன் என்னும் முற்போக்காளர், இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தைப் பற்றிப் படம் எடுத்த தீரர், இனி கிறித்துவத்தின் மதமாற்ற அரசியலைப் பற்றி எடுப்பாரா? எடுத்தால் நிச்சயம் அவருக்கு ஒரு சலாம் உண்டு. எல்லா மதங்களையும் உண்மையிலேயே ஒரே மாதிரியாகப் புறக்கணிப்பவர்கள் வணங்கத் தக்கவர்களே. படமாக எடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒன்றிரண்டு காட்சிகளாவது…?
03. சாரு நிவேதிதாவும் எத்தனை நாள்தான் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்காக கமலைத் திட்டிக்கொண்டிருப்பது? அது என்னவோ சாருவின் ராசி, அவர் யாரையாவது பாராட்டினால், இப்படி நடந்துவிடுகிறது. ‘மொழி’யைப் பாராட்டினார். இனி ராதா மோகன் பெயரையும் பாராட்டு என்னும் வார்த்தையையும் ஒரே வரியில் அவர் எழுத வாய்ப்பே இல்லாத அளவுக்கு இப்படி நடந்துவிட்டது. அதிலும் இப்படம் இஸ்லாமியர்களுக்கான எதிர்க்குரல். சாருவின் அறச்சீற்றத்தை இனி யாரால் தடுக்க இயலும்? இனி தொடங்கப் போகும் சாருவின் எழுத்து ரகளையை ரசிக்கலாம்!
04. ஒரு திரைப்படத்தில் ஒருவர் ஓர் எதிரியைத்தான் உருவாக்கிக்கொள்வார். இதில் ராதா மோகன் ஹிந்துத்துவ இஸ்லாமிய எதிரிகளைச் சம்பாதித்திருக்கிறார். இனி என்ன நடக்கும் என்னும் ஆர்வம்.
05.ஹிந்துக்களை நிந்திப்பதும், அரசியல் ஹிந்துக்களை விமர்சிப்பதும் மட்டுமே எளிது என்பது இனி ராதா மோகனுக்கு உறைக்கத் தொடங்கும்.
06.நாட்டில் நிலவும் உண்மை ஒன்று, ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தால் மட்டுமே தைரியமாக அதை நீங்கள் சொல்லமுடியும் என்பதும் ராதா மோகனுக்குப் புரியும்.
07.முற்போக்காளர் பட்டம் பெற முப்பது வருஷம், அதைப் போட்டு உடைக்க முப்பது நிமிடம் என்பதும் புரியும்.
அரசியலை ஆழப் பார்க்கப் பழகாத மக்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாடுவார்கள். பெரும்பாலான நம் மக்கள் இவ்வகையினர்தான் என்பதால் இதுவே நிகழும் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். கூடவே பாடல் இல்லாத, காதல் இல்லாத, சண்டை இல்லாத, தனிப்பட்ட ஹீரோயிஸ க்ளிஷே இல்லாத படம் என்று பத்திரிகைகள் எழுதும். அதோடு, சூடோ செக்யூலரிசக் காட்சிகளின் பாராட்டும் சேர்ந்துகொள்ளும். இதுவும் நிகழ்ந்தே தீரும் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். ஆனால் இணைய வாசகர்கள், எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், டிவிட்டர்கள்? இந்த வகையினரை ஏமாற்றுவதில்தான் ராதா மோகன் தோற்றுவிட்டார். அவர்கள் இந்தப் படத்தைக் கைமா செய்யாமல் விடமாட்டார்கள் என்றுதான் பெரும்பாலும் நினைக்கிறேன். என்னிலிருந்து எண்ணிக்கொள்ளுங்கள்.
சரி, ராதா மோகனின் இத்தனை குழப்பங்களுக்கு என்ன காரணம்? அவரே இப்படத்தில் சொல்கிறார், காந்தியையும், கார்ல் மார்க்ஸையும் படிச்சு இப்படி ஆயிட்டேன் என்கிறார். குழப்பம் எந்த ‘இடத்திலிருந்து’ துவங்குகிறது பார்த்தீர்களா?!