பா.ம.க – ராமதாசு – வன்னிய சாதிவெறி போன்ற சொற்களே இல்லாமல், மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட பல மொண்ணை அறிக்கைகள் இளவரசன் மரணத்தையொட்டி வெளிவந்து கொண்டிருக்கின்றன. சீமான் வெளியிட்ட அத்தகையதொரு அறிக்கையை விமரிசித்து நாம் நேற்று முன்தினம் ஒரு பதிவு எழுதியிருந்தோம்.
அதற்குப் பின்னூட்டமிட்ட சிலர் வளைத்து வளைத்து பல வார்த்தைகளில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். “எல்லா கட்சிகளும் மழுப்பியிருக்கும்போது எங்கள் செந்தமிழனை மட்டும் ஏன் வறுக்கிறீர்கள்?”, “சாதிப்பூசல் வந்து தமிழர் ஒற்றுமை கெட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் காரணமாகத்தான் அண்ணன் பா.ம.கவை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை” – இதுதான் அவர்களுடைய லா பாயின்ட்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
இனி விசயத்துக்கு வருவோம். சீமான் மீது நமக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய பொதுக்கூட்டத்தை இந்து மதவெறியர்கள் தாக்கியபோது அதைக் கண்டித்து குரல் கொடுத்திருக்கிறோம். கருணாநிதி ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்ததை எதிர்த்தும் குரல் கொடுத்திருக்கிறோம். இதெல்லாம் சொற்ப காலம்.
2009 வாக்கில் ஈழப்பிரச்சினையை முன்வைத்து அவர் நடத்தத் தொடங்கிய இனவாத-சந்தர்ப்பவாத அரசியல், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பாசிச ஜெயாவுக்கு காவடி எடுத்தது, ஈழத்தை கோட்சே ஆதரித்தால் நான் கோட்சே கட்சி என்று கொள்கை விளக்கமளித்தது, மும்பை முஸ்லிம் இனப்படுகொலையை நடத்திய சிவசேனாவை ஆதரித்து தேர்தல் வேலை செய்தது, முத்துராமலிங்கத் தேவர் வழிபாடு .. என வெகு வேகமாக தன்னைத்தானே அவர் அம்பலமாக்கிக் கொண்டார். பிறகு பெரியார் எதிர்ப்பை மையமாகக் கொண்ட பார்ப்பன அடிவருடி அரசியலை, “திராவிட இயக்க எதிர்ப்பு” என்ற பெயரில் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டார். பிறகு மூக்குடைபட்டு மழுப்பினார்.