சனி, 12 நவம்பர், 2016

மோடி ஒழித்தது யாரை? வறியமக்களின் சேமிப்பை குலைத்துவிட்டார்... அடித்தட்டு மக்களை தெருவுக்கு துரத்தி விட்டார்


கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக்கூறி மோடி, கடந்த 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அன்றிலிருந்து இன்று நாடுமுழுக்க மக்களிடம் எழுந்த பதட்டம் இன்னும் அடங்கவில்லை. தங்களிடம் இருக்கும் சில ஆயிரம் ரூபாய்களை மாற்ற மக்கள் வங்கிகளுக்கும் ஏ.டி.எம். மையங்களுக்கும் படையெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், சில்லறை தட்டுப்பாட்டால் சின்னச்சின்ன செலவுகள்கூட செய்ய முடியவில்லை. பெருந்தொகை இல்லாத காரணத்தால் திருமணங்கள், சடங்குகள் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த முடியாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். காலையில் வங்கிகள் திறந்த சில மணி நேரங்களில் பணம் தீர்ந்துவிடுவதால் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். ஏ.டி.எம். நிலையங்களோ அதைவிட மோசம். எப்போது பணம் நிரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் நிரப்பியதும் தீர்ந்துவிடுகிறது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். மெஷின்களில் நிரப்ப முடியவில்லை. காரணம் ATM CASH LOADER CASETTE-இல் அது பொருந்தவில்லையாம். இனி, புதிய CASETTE-கள் வந்தபின்தான் அது சாத்தியமாம். 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்துக்கு வராதநிலையில் வெறும் நூறு ரூபாய்களை நிரப்பியே ஏ.டி.எம்-கள் ஓடுகின்றன. ஆனால் ஏ.டி.எம்-களுக்குத் தேவையான நூறு ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அனுப்பாதநிலையில் இது இன்னுமொரு நெருக்கடியாக உருவாகியுள்ளது.

செலவுகளை பொதுவாக பெருஞ்செலவுகள், சிறு செலவுகள் என்று சொல்லும் அதேநேரம் வணிகர்களை பெரு வணிகர்கள், சிறு வணிகர்கள் என்கிறோம். பெருவணிகள் என்பது கோடிகளில் நடப்பது. பெரும்பாலும் நேரடி பணப் பரிவர்த்தனை இல்லாமல் வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் நடப்பது. ஆனால் சிறுவணிகம் என்பது சில ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் நடப்பது. அது சில்லறை பணத்திலும் சில நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் நடப்பது. இப்போது 500,1000 செல்லாது என்ற அறிவிப்பால் முடங்கிப்போனது இந்த சில்லறை வணிகம். நமது கிராமப் பொருளாதாரமும், சிறு நகரப் பொருளாதாரமும் பெரும்பாலும் சில்லறை வணிகத்தை நம்பி நடப்பதால் சந்தையில் பணப்புழக்கம் முடங்கிய காரணத்தால் இந்த சில்லறை வணிகம் சிதைந்துவிட்டது. அதற்கும் கீழான உதிரித் தொழிலாளர்கள் எனப்படும் கூலிகள், கீரைக்கட்டுகளை தலையில் சுமந்து விற்பனை செய்கிறவர்கள், சாலையோரம் பூ விற்பவர்கள் தங்கள் வியாபாரங்களை விட்டு சில நாட்கள் ஆகிவிட்டது. கையில் பணமில்லாத மக்கள் சேமிப்பில் கைவைத்து விட்டார்கள். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்குப் பதிலாக சில்லறை வணிகத்தை சீர்குலைத்து எளிய மக்களிடமிருந்த சேமிப்பைக் குலைத்துவிட்டார் மோடி என்பதுதான் மக்களின் குறையாக உள்ளது.மின்னம்பலம் .com

கருத்துகள் இல்லை: