எந்தவொரு கிரிக்கெட் பந்து வீச்சாளரும் பொறாமைப்படும் வகையில் காவல் துறை தனது என்கவுண்டர் திறமைகளை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்தெடுத்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரத்தைப் பாருங்கள். 2008ம் ஆண்டு 5 முறை குண்டு வீசி ஆறு விக்கெட் எடுத்திருக்கிறார்கள். 2009ல் இரண்டுக்கு இரண்டு என்னும் செட் கணக்கில் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. 2010ல் நல்ல முன்னேற்றம். ஐந்து வாய்ப்புகள், ஏழு விக்கெட். 2011ல் மேட்ச் நடைபெறவில்லை. 2012 அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது. இரு மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், ஒரே நாளில், ஐந்து விக்கெட்டுகள்.
‘சென்னை மக்கள் பலரும் இதனை சரியான நடவடிக்கை என்று வரவேற்றுள்ளனர்.’ கொள்ளையர்கள் என்கவுண்டர்: மக்கள் பாராட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் என்று தலைப்புச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மிகப் பெரிய என்கவுண்டர் இதுவே என்று கண்டறிந்து கொட்டை எழுத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். அதே சமயம், வங்கிக் கொள்ளையர் ஐவரையும் ‘மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக’ சொல்லும் காவல்துறையின் வாதங்களில் உள்ள ஓட்டைகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.