animal-iயக்குனர் ஷங்கர் தஞ்சை மாவட்டத்தின் வயற்சூழலில் வளர்ந்திருக்கா விட்டாலும், கலைச்சூழலில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை, ஷங்கர் பிறந்து வளர்ந்த நேரமோ தெரியவில்லை, தமிழ்நாட்டின் பாலைவனமாக மாற ஆரம்பித்திருந்தது. தஞ்சை நாட்டுப்புறக் கலைகளும், இயக்குனர் ஷங்கர் வந்து ஆளான சினிமா துறையால் இதே காலத்தில் சீரழிக்கப்பட்டது . மக்களின் மண்சார்ந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பேசிய நாட்டுப்புறக் கலைகள் சினிமா ராகத்திலும், மோகத்திலும் அடையாளங்களை இழந்தன.
தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவலு பாடுவதாக மாறி விட்டது. சென்னை சபாக்களில் நடக்கும் டிசம்பர் கச்சேரிகளில் கூட இடைவேளை கேண்டினின் கிச்சடி, பங்குச் சந்தை பரிவர்த்தனைகளே பேசு பொருளாக இருந்தன. யாரும் ராகங்களின் ஆலாபனை குறித்தோ, கலாச்சாரத்தில் அவுரோகணம் குறித்தோ கதைப்பதில்லை.