பாரதிய ஜனதாவை வெறும் அகோரி, சங்கர மட, ஆதீனங்களின் கட்சியாக மட்டும் சுருக்குவது தவறு. கஞ்சா, நெய் பொங்கல், புளியோதரையால் வரும் சக்தியையோ இல்லை சதியையோ ஒரு ஊட்டி தேநீரை அருந்தியபடியே நாம் எதிர்கொண்டு விடலாம். ஆனால் அமேசான் காட்டின் ‘மூலிகை திரவ’த்தை ஆம்வேயால் அருந்திக் கொண்டு, மெக்டனோல்டு, பர்கரோடு புல்லட் புரூஃப் இறுமாப்பில் மௌரியா ஷெர்ட்டனில் கதைக்கும் கனவான்களை அப்படி எதிர்கொள்வது சிரமம்.
அமெரிக்கா முதல் அம்பானி வரை, விகடன் துவங்கி குமுதம் வரை, சோ தொட்டு சுப்ரமணியசாமி இட்டு ஒரு பெரும் அறிஞர் கூட்டமே ராப்பகலாய் பாஜகவின் எதிர்கால அதிகார மென்பொருட்களை வன்நபர்களால் வடிவமைத்து வருகிறது. இந்த சிந்தனைக் குழாம் ஒன்று விடாமல் சர்வசாத்திய வஸ்துக்களையும் குலுக்கி போட்டு தாமரையை மலர வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.
இவர்களின் எண்ணங்களோ, எதிர்பார்ப்புகளோ பல்வேறு வண்ணபாதைகளை காட்டினாலும் பாதைகள் சேருமிடம் காவிக்கரைதான். பாஜகவின் புதிய தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனின் நியமனத்தை பெண்ணுரிமையின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். வானம் பார்த்த சோகத்திலிருக்கும் வானதி சீனிவாசனும் கூட ஒரு பெண்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். பாஜகவின் ப்ரியத்திற்குரிய வட இந்திய வணிக வர்க்க கூட்டணியை இங்கேயும் நட்டு வைப்போமென பாடுபடும் நாடார் பெருவணிகர்கள் தங்களது வெற்றியாக அகமகிழ்கிறார்கள். தமிழிசை ஒரு நாடார் அல்லவா!