வியாழன், 23 ஜூலை, 2026

தூத்துக்குடி லாக்கப் மரணம் - கைதான இளைஞர் மரணம் - உறவினர்கள் போராட்டம்

   hindutamil.in  - ரெ.ஜாய்சன்  :   தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் இன்று (ஜூலை 23) உயிரிழந்தார். காவல் துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவனும் பங்கேற்றார்.


தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (24). இவர், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து அவரை தென்பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். காவல் நிலைய லாக்-அப்பில் இருந்தபோது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, அவரை காவல் நிலைய ஜாமீனில் போலீஸார் விடுவித்தனர். மேலும், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவரது குடும்பத்தினர் வந்து அவரை அழைத்து சென்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அருணாச்சலம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடலை உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

உறவினர்கள் போராட்டம்:

இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே திரண்டனர்.

“காவல் துறையினர் தாக்கியதில் தான் அருணாச்சலம் இறந்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், மருத்துவக் கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு சென்ற சடலத்தை உடனே மருத்துவமனைக்கு திரும்ப கொண்டுவர வேண்டும்” என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கீதாஜீவன் தலைமையில் திமுகவினரும் அங்கு வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்து, தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் மருத்துவமனை முன்பு கீதாஜீவன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அருணாச்சலம் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மீண்டும் பிணவறைக்கு கொண்டுவர போலீஸார் சம்மதித்தனர். இதையடுத்து சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தை அவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அருணாச்சலம் உடல் மீண்டும் பிணவறைக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர், எஸ்பியிடம் மனு:

இதன் பின்னர் உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, அருணாச்சலம் மரணம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும். அவரது பிரேத பரிசோதனையை முறையாக நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அருணாச்சலம் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதற்கிடையே, போலீஸார் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை விளக்கம்:

இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லி லிட்டர் கொள்ளளவுள்ள 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன. அவரது உடல் சோதனையானது, காணொலி பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 17.07.2026 அன்று மாலை சுமார் 5.50 மணியளவில், அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டடார். பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், அவர் திடகாத்திரத்தில் இருப்பதற்கு தகுதியுடையவர் என சான்றளித்ததுடன், அவரது உடலில் எந்தவித வெளிப்புற காயங்களும் இல்லை என்றும் மருத்துவ சான்றளித்தார்.

மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அவர் மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டார்.

லாக்-அப்பில் இருந்தபோது, மற்ற கைதிகளுடன் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தார். இச்சம்பவம் லாக்-அப்புக்கு முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, காவல் துறையினர் உடனடியாக அவருக்கு தேவையான உதவிகளை செய்து, குடிநீர் வழங்கி, பாதுகாப்பாக அமர வைத்தனர். காவல் நிலைய வரவேற்பு பகுதியில் இருந்த அவரது தாயாரும் உடனடியாக அழைக்கப்பட்டார். அதன்பின்னர், அவரது உடல்நிலை இயல்பாக இருந்ததால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அவரது உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதன்பின்னர், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள், காவல் துறையினருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சையின்போது, அவருக்கு மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல், 23.07.2026 அன்று அவர் இறந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கனிமொழி எம்.பி கண்டனம்:

இந்தச் சம்பவத்துக்கு தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல் துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.

காவல் துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதல்வர் விஜய் உட்பட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான். நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்” என்று அந்தப் பதிவில் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: