தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். வெளியே உள்ள எதிரிகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. போதும் போதும் என்னும் அளவுக்கு, உள் வீட்டிலேயே எதிரிகளை கூடவே வைத்திருக்கும் பாக்கியசாலிகள் அவர்கள்.
பொதுவாக காங்கிரஸ்காரர்களுக்கே இந்த சிறப்பு அம்சம் இருந்தால், தமிழகத்தில் அவர்களுக்கு எல்லாம் மகா தலைவராக உள்ள தங்கபாலு ஐயாவுக்கு இந்த சிறப்பு அம்சம் எவ்வளவு உச்சத்தில் இருக்க வேண்டும்?
அவருக்கு வஞ்சகம் செய்யாமல் வாரிக் கொடுத்திருக்கிறார் கடவுள். “2ஜி ஊழல் குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரம் மீது உரிய நேரத்தில், உரிய நடவடிக்கை எடுப்பார் சோனியா” என்று சேம்-சைட்-கோல் போட்டு அதிர வைத்திருக்கிறார் இந்த தங்கத் தலைவர்.
தமிழகத்தை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன், தமிழகம் முழுவதும் சூறாவளி (!) சுற்றுப் பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் தலைவர். பிரச்சாரத்தின் நிறைவு நாளான இன்று, அண்ணனின் பாதக் கமலங்கள் சேலத்தில் பதிந்தன.