பிள்ளைகளை மார்க் எடுக்கும் இயந்திரங்களாக்கி தற்கொலைக்குத் தள்ளும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். தனியார் கல்விக்கொள்ளைக்கு எதிராகவும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்காகவும் உங்கள் பிள்ளைக்காக நீங்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த அருண்குமார் (17) என்கிற மாணவர் ஜூலை 5-ம் தேதி விடுதி ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ள மேம்மாம்பட்டை என்கிற கிராமம். இவருடைய தந்தை ஆறுமுகம் ஒரு முந்திரி விவசாயி. அருண்குமார் முதலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து பெற்றோர் அவரை ராசிபுரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.