கடந்த செவ்வாய் (8.11.16) இரவு பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்த நிமிடத்திலிருந்து இதுவரை இதுகுறித்து அளவுக்கதிகமாக எழுதியாயிற்று, விவாதித்தாயிற்று. ஆனாலும், புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டு மட்டும் எப்படியோ ஆய்வாளர்களிடமிருந்தும் விமர்சனர்களிடமிருந்தும் தப்பிவிட்டது. அறிவிப்பு வெளியான கணம் முதல் மக்கள் நூறு ரூபாய் நோட்டுகளை மீட்கவும், தங்களிடம் உள்ள ரூபாய் ஆயிரம் மற்றும் ஐநூறு நோட்டுகளை செலுத்திவிடவும் ஏடிஎம்களை நோக்கி ஓடுகிறார்கள். அரசின் இந்த முடிவின் தாக்கங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த பிரச்னையையும் சமூக வலைதளங்கள் ஏளனப் புன்னகையோடு நையாண்டி செய்தது. அரசியல்வாதிகள் சிலர் புகழ்ந்தார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால், புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அது... புதிய ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள தேவநாகரி எண்கள்.
மிகப்பெரிய விவாதம்
அரசியல் நிர்ணய சபையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அனைத்து அம்சங்களிலும், இந்திய அரசின் தேசிய மொழி குறித்து மிகக் கடுமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் ஆட்சி மொழி குறித்த இந்த விவாதம் மிகக் கடுமையானதாகவும் நீடித்ததாகவும் இருந்தது. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்கள். இந்தி பேசாத மாநிலங்களில் தங்களைப் புறக்கணிப்பதாகவும், இந்தியை தங்கள் மீது திணிப்பதாகவும் கருதினார்கள். எண்ணற்ற ஆலோசனைகள், விவாதங்கள், எதிர் விவாதங்கள், திருத்தங்கள், தலையீடுகள் மற்றும் குழு அறிக்கைகளுக்குப் பிறகு இந்தி ஆங்கிலத்தோடு இணைந்து அதிகாரப்பூர்வ இந்திய ஆட்சி மொழியாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் பிறகு அரசு பணிகளில் பயன்படுத்தப்படும் எண்கள் குறித்த கேள்வி எழுந்தது.
மொழி குறித்த விவாதத்தின்போது, கிரான்வில் ஆஸ்டின் தேவநாகரி மற்றும் அரபு எண்களைப் பயன்படுத்துவது ‘வலி மிகுந்தது’ என்று வர்ணித்தார். சர்வதேச அளவில் தேவநாகரி எண்கள் என்று அழைக்கப்படும் இந்திய எண்களிலிருந்துதான் சர்வதேச எண்கள் தோன்றியது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனால் சர்வதேச எண்களில் இந்திய எண்களில் சாயல் இருப்பதை காண முடியும்.
தென்னிந்திய சட்டசபைகளில் அதன் உறுப்பினர்கள் இந்தி எண்களை பயன்படுத்துவது குறித்து பல பிரச்னைகளையும் கவலைகளையும் முன்வைத்தனர். குறிப்பாக டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் இந்தி எண்களில் தேவநாகரி எண்களோடு உள்ள தொடர்பையும் அதை பயன்படுத்துவதில் உள்ள சிக்கலையும் விளக்கினார். அப்போது, வங்கி மற்றும் விஞ்ஞானத்துறை மற்றும் பிற தொழில்நுட்பத்துறைகளில் சர்வதேச எண் வடிவத்தை பயன்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமாக இருக்கும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்தது. இறுதியாக இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 343இன் கீழ், இந்திய அரசு பணிகள் அனைத்திலும் சர்வதேச எண் வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பு தொடங்கியதிலிருந்து அடுத்த பதினைந்து ஆண்டுகள் வரை மட்டும் தேவநாகரி எண்கள் குடியரசுத் தலைவரின் ஆணையில் பயன்படுத்தவும் அதே சட்டத்தில் வகை செய்யப்பட்டது. ஆனால், கேர் தலைமையில் 1957இல் அமைக்கப்பட்ட ஆட்சி மொழி ஆணையம் தேவநாகரி எண்களைப் பரிந்துரைக்கவில்லை. ஆனால், மத்திய அரசு தேவைப்பட்டால் அமைச்சக வெளியீடுகளில் ஓரிரு முறை பயன்படுத்தவும் பரிந்துரைத்தது. 1960இல் குடியரசுத் தலைவர் ஆணையில், “விஞ்ஞானம், வங்கி, தொழில்நுட்ப, புள்ளிவிவர வெளியீடுகள் போன்ற அரசு அலுவல் பயன்பாட்டுக்கு சர்வதேச எண்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். மத்திய அமைச்சகங்களின் வெளியீடுகளில் (publication) பயன்படுத்த தேவையிருந்தால் மட்டுமே தேவநாகரி எண்களை பயன்படுத்த வேண்டும்’ என்று அதன் பயன்பாட்டை தெளிவாக வரையறுக்கப்பட்டது. ஆட்சிமொழி சட்டம் 1963ம் சரி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 343ம் சரி தேவநாகரி எண்களின் தேவையை வலியுறுத்தவில்லை. எங்கள் அறிவுக்கு எட்டியவரை இந்த தேவநாகரி எண் குறித்த பிரச்னைக்கு தீர்வை எந்தச் சட்டமும் கொடுக்கவில்லை.
சத்தமில்லாமல் எழுச்சியடையும் இந்தி
இது இப்போது பிரச்னையாக உருவெடுத்துள்ளது. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது நிச்சயமாக 1960இன் ஆணை மத்திய அமைச்சகங்கள் இந்தி வெளியீடுகளின் கீழ் அல்ல. அவசரமாக அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் எந்த அடிப்படையில் தேவநாகரி எண்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. புதிய ரூபாய் நோட்டுகளை தேவநாகரி எண்களோடு அச்சிட்டது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. தற்போது ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது அரசு அலுவல் தொடர்புடையது என்று ஒருவர் நிச்சயமாக விவாதிக்க முடியும். ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது அமைச்சக வெளியீடு இல்லை.
ரிசர்வ் வங்கி மத்திய அரசோடு ஒருங்கிணைந்து ரூபாய் நோட்டுகளை வடிவமைப்பதாகக் கூறுகிறது. தற்போது மோடி அரசின் சுத்தமான இந்தியாவின் சின்னம் எப்படி புதிய இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றது என்பதை ஒருவர் எளிமையாக யூகிக்க முடியும். இந்த அரசு புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்களை பயன்படுத்தியதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வலுவாக நிறுவப்பட்டது கொள்கையை எதற்காக மாற்ற வேண்டும்?
இந்த மறைமுகமான மாற்றத்தின் மூலம் இந்தியைப் பரவலாக்கி இந்தியிசத்தை ஊடுருவச் செய்கிறதா இந்த அரசு? தேவநாகரி எண்களை பின்வாசல் வழியாக கொண்டு வருவதன் மூலம் இந்தியிசத்தை நிறுவ முயற்சிக்கிறதா மத்திய அரசு? தற்போது பழைய ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை பெறும் நடவடிக்கையால் கூச்சலும் குழப்பமும் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பலவிதமாக பொருளாதாரத் தாக்கங்கள், சிக்கல்கள் ஏற்படும். இந்த நேரத்தில் சத்தமில்லாமல் நுழைந்துவிட்ட தேவநாகரி எண்கள் குறித்த பிரச்னை வெளியே தெரியாமல் மூழ்கடிக்கப்படும். இதை நாம் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். சட்டப்பூர்வமாக இந்த பிரச்னையை உச்சநீதிமன்றம் எதிர்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைள் மூலம் புதிய வழிகளில் இந்தியிசத்தை பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. இது உச்சபட்ச இந்திய அரசியலமைப்பு சட்ட மீறல்!
நன்றி: THE WIRE
தமிழாக்கம்: வேட்டை பெருமாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக