ன் நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியர் ராஜா, செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்தும், இதற்கு எதிராக துணிவுடன் அகிலா நடத்திவரும் போராட்டம் குறித்தும் அறிந்திருப்பீர்கள். சன் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திகளில் ஒருவராக 15 ஆண்டு காலமாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ராஜா, புழல் சிறையில் சில நாட்களை கழித்துவிட்டு, நிபந்தனை பிணையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினசரி கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். ராஜாவுக்குப் புரோக்கர் வேலைப் பார்த்த வெற்றிவேந்தன் என்ற நிருபர் இன்னமும் காவல்துறையால் தேடப்பட்டுவருகிறார். இது அகிலா என்ற தனியொரு பெண்ணின் பிரச்னை இல்லை. சன் டி.வி. என்ற தனியொரு நிறுவனத்தின் பிரச்னையும் அல்ல. தமிழ் ஊடகங்களின் அவலநிலைக்கு அகிலா ஓர் துலக்கமான உதாரணம்.
ராஜா போன்ற ஊடகப் பொறுக்கிகளுக்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கியிருக்கும் இந்தப் பெண்ணுக்கு அமைப்பு ரீதியாகவும், தனி நபர் என்ற அளவிலும் சிலர் உதவி வருகின்றனர். ஆனால் இதற்காகத் திரண்டு போராடியிருக்க வேண்டிய கடப்பாடுள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் இருந்து  இதுவரையிலும் ஒரு சவுண்டும் இல்லை. இந்தப் பிரச்னை எங்கேயோ சிங்கப்பூர் பக்கம், தாய்லாந்து பக்கம் நடப்பதைப் போலவே மௌனமாக இருக்கிறார்கள். இது அருவெறுப்பான மௌனம்; அச்சம் தரும் அமைதி. தங்கள் சொந்த வலிக்காகக் கூட போராடத் திராணியற்ற இவர்கள்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாம். ஊருக்கு நியாயம் சொல்கிறார்களாம். மக்களுக்கு உண்மைகளை உரக்கச் சொல்கிறார்களாம். என்ன வேடிக்கை இது?