
மின்னம்பலம் : “திமுகவிலிருந்து அதிருப்தியில் விலகி நிற்பவர்களையும்,
மாற்றுக்
கட்சிக்குப் போனவர்களையும் இழுக்க அழகிரி முயற்சி செய்துவருவது
தெரிந்ததுதான். அதே நேரம் அழகிரிக்கு முன்பாக அவர்களை எல்லாம் தன் பக்கம்
இழுத்து ஆதரவுக்கரம் நீட்ட ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். இதைக் கொஞ்சமும்
எதிர்பார்க்காத அழகிரி கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருக்கிறாராம்.
முன்னாள்
அமைச்சர் முல்லைவேந்தனையும் விழுப்புரத்தில் பொன்முடிக்கு
எதிரானவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழகிரி பேசிவருவதை நேற்றைய
டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தோம்.
விழுப்புரத்தில் என்ன
நடந்தது என்பதைச் சொல்கிறேன்.
முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வான புஷ்பராஜ்
தலைமைக்கு நம்பிக்கையானவர். பொன்முடிக்கும் புஷ்பராஜுக்கும் எப்போதும்
ஏழாம் பொருத்தம்தான். புஷ்பராஜை, பொன்முடி தொடர்ந்து ஓரங்கட்டிவருகிறார்.
இதெல்லாம் தெரிந்துதான் புஷ்பராஜுடன் அழகிரி பேசியிருக்கிறார். அப்போது,
‘நீ இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இப்படியேதான் இருக்கணும். பொன்முடி
உன்னை வளரவிடவே மாட்டார்..’ என்று சொல்ல... அதற்கு புஷ்பராஜ், ‘நீங்க
சொல்றது உண்மைதான்ணா… எனக்கும் பொன்முடிக்கும்தான் பிரச்னை. எனக்கும்
தளபதிக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
இனி இது சம்பந்தமாகப் பேச
வேண்டாம்...’ என்று சொல்லி போனைத் துண்டித்துவிட்டாராம்.