மட அதிபதிகள்19.02.2013 தினமணியில் “அரங்கேறும் வக்கிரங்கள்” என்று பாலியல் வன்முறை குறித்து ஒரு தலையங்கம். டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களின் அறச்சீற்றம் தாங்க முடியாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. அதில் தான் மட்டும் தனித்து தெரியவேண்டும் என்று நினைக்கிறார் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரியத்திற்குரிய வைத்தி மாமா!
முறை தவறிய உறவு, காரணமற்ற விவாகரத்து என்று மேலைநாட்டு நாகரீகத்தை எள்ளி நகையாடியது போய் இன்று அவர்கள் இந்தியாவை வக்கிர தேசம் என்று முகம் சுளிக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாக துக்கப்படுகிறார் வைத்தி. கூடவே தாய்மை, பெண்மையை உயர்வாக கருதிய இந்திய நாகரீகம் போலித்தனமானது என்பதாய் சமீபத்திய சம்பவங்கள் தோலுரிப்பதாகவும் அவர் வருந்துகிறார்.
பாரதம் கற்புக்கும், விதேசிகள் விபச்சாரத்திற்கும் பெயர் போனவை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முடிவு. உண்மையில் கற்பின் மறுபக்கம்தான் விபச்சாரம் என்பது இவர்கள் அறியாதது அல்ல, மறைக்க விரும்பும் ஒன்று என்பதே உண்மை. சீதை, கண்ணகிகளை கற்புக்கரசிகளாய் தொழும் நாட்டில்தான் பார்ப்பன, ஷத்திரியர்களின் பொறுக்கித்தனத்திற்கு பயன்படும் விதத்தில் தேவதாசி எனும் உலகின் முதல் விபச்சார நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள். vinavu.com