செவ்வாய், 8 நவம்பர், 2016

முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

முதல்வர் விருப்பப்பட்ட நாளில் வீட்டுக்குப் போகலாம் என, அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் ரெட்டி சொல்லிவிட்டார். அதற்கு, அவரது உடல்நிலை தயாராக இருக்கிறதா என்ற கேள்விதான் எல்லோரிடமும் எழுந்துள்ளது. லண்டன் மருத்துவர் ரிச்சர்டு, இனி அங்கிருந்தபடியேதான் சிகிச்சை அளிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அப்பல்லோவைப் பொருத்தவரை, தற்போது முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சைதான் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையிலிருந்து வந்த இரண்டு சீனியர் லேடி பிசியோதெரபிஸ்ட்தான் சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் இருவரும் சென்னைக்கு வந்து 20 நாட்களுக்குமேல் ஆகிவிட்டதால், வேறு ஆட்களை மாற்றி அனுப்புமாறு தங்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசியிருக்கிறார்கள்.
ஆனால் எலிசபெத் மருத்துவமனைத் தரப்பிலிருந்தோ, ‘இப்போது திடீர்னு வேறு ஆட்களை மாற்றுவது சரியாக இருக்காது. அவங்க கண்டிஷன் என்ன என்பது உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். அதனால், அவர் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை நீங்கள் இருவரும் சிகிச்சையளிப்பதுதான் சரியாக இருக்கும். புதிய நபர்கள் மாற்றுவதை அவர்களும் விரும்பமாட்டார்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அங்கே செய்துகொடுக்க சொல்லியிருக்கிறோம். அதில் எதுவும் குறையிருந்தால் சொல்லுங்கள். நாங்கள் பேசுகிறோம்’ என்று சொல்லிவிட்டார்களாம்.
அதனால், ஜெயலலிதா வீட்டுக்கே அனுப்பப்பட்டாலும்கூட தற்போது சிகிச்சையளித்துவரும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை பிசியோதெரபிஸ்ட்கள் தொடர்ந்து சிகிச்சையளிப்பார்கள். அண்ணா சாலையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஸ்டார் ஹோட்டலில்தான் அந்த இரண்டு பிசியோதெரபிஸ்ட்களுக்கும் ரூம் போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் அப்பல்லோவுக்கு வந்துபோக பிரத்யேகமான காரும், டிரைவரும் ஏற்பாடு செய்துள்ளார்கள். மருத்துவமனைக்கு வந்துபோன நேரம்போக, மற்ற நேரத்தில் அவர்கள் சென்னையில் எங்கே போக விருப்பப்பட்டாலும் அங்கே அழைத்துப்போகவும் டிரைவருக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். சென்னையில் உள்ள ஷாப்பிங் மால்கள், கபாலீஸ்வரர் கோயில் என, பல இடங்களையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுற்றிவருகிறார்களாம் அவர்கள்.

(பிசியோதெரபிஸ்டுகள் மேரி மற்றும் சீமா)
நேற்று மாலையில், போயஸ் கார்டன் இருக்கும் சாலையில் சென்று ஜெயலலிதாவின் வீடு வரை அந்த பிசியோதெரபிஸ்ட் இருவரும் போய் வந்திருக்கிறார்கள். முதல்வரை வீட்டுக்கு மாற்றும்போது தேவையான வசதிகள் அங்கே சரியாக இருக்கிறதா என்பதை பிசியோதெரபிஸ்ட் இருவரும் பார்த்திருக்கிறார்கள். அங்கே, தற்போது முதல்வருக்காக முதல்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக மருத்துவமனை செட்அப்பில் சில மாற்றங்களையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை கார்டனில் இருந்த முதல்வரின் உதவியாளர் பூங்குன்றன் கவனமாக குறித்துக்கொண்டாராம். முதல்வர் படுக்கப்போகும் கட்டில் உயரம் உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் டேப் வைத்து அளவை செக் செய்திருக்கிறார்கள். ஆக, ‘விரைவில் டிஸ்சார்ஜ்’ என்பதை நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் உணர்த்த ஆரம்பித்துள்ளன.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“முதல்வரின் தொண்டையில் இருக்கும் டியூப் இன்னும் எடுக்காமல் இருக்கிறது என தகவல்கள் வருகிறதே?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்டது.
பதிலை அடுத்த மெசேஜில் போட்டது வாட்ஸ் அப்.
“செயற்கை சுவாசம் கொடுப்பதற்காகத்தான் முதல்வரின் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து அந்த டியூப் செருகப்பட்டது. தற்போது, செயற்கை சுவாசம் கொடுக்கும் நேரத்தை படிப்படியாக குறைக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் தொண்டையில் உள்ள அந்த டியூப் இன்னும் அகற்றப்படவில்லை. அந்த டியூப்பை எடுத்துவிட்டால், திடீரென மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால் முதல்வர் சிரமமின்றி சுவாசிக்கும்வரை அந்த டியூப் இருக்கட்டும் என்பது அப்பல்லோ டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த டியூப் இருப்பதால், வாய் வழியாக உணவு உட்கொள்வது முடியாது. அதனால், மூக்கில் உள்ள உணவுசெலுத்தும் டியூப் வழியாகத்தான் திரவ உணவுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

தொண்டையில் உள்ள டியூப் இன்னும் ஒருசில தினங்களில் அகற்றப்படலாம். அந்த இடத்திலிருக்கும் புண் ஆறுவதற்கு குறைந்தது ஒரு மாத காலம் ஆகுமாம். அதுவுமில்லாமல் முதல்வருக்கு சர்க்கரை இருப்பதால் புண் அவ்வளவு சீக்கிரம் ஆறாது. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து, புண் ஆறுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படும். அதன்பிறகே முதல்வரை டிஸ்சார்ஜ் செய்வார்கள். அதாவது, அதிகபட்சம் இன்னும் 15 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ்-க்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த 15 நாட்களில் நல்ல நாள் எது என்பதை முடிவுசெய்யும் பொறுப்பு சசிகலாவுடையது. தீபாவளிக்குமுன்பு வீட்டுக்குப் போகவேண்டும் என்பதில் சசிகலா ஆர்வம் காட்டியிருந்தாலும், இப்போது மருத்துவர்கள் சொல்வதைத் தாண்டி எதுவும் சொல்வதில்லை. ‘அக்கா குணமாகணும். அதுவரைக்கும் அவங்க எங்கே இருந்தாலும் பரவாயில்லை!’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாராம்.’’ என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“ஜெயலலிதா உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத்தை ஒருவேளை, சசிகலா இப்போதுதான் உணர ஆரம்பித்திருப்பாரோ என்னவோ?”  மின்னம்பலம,காம்

கருத்துகள் இல்லை: