வியாழன், 10 நவம்பர், 2016

இது ஒரு விஜயகாந்த் / அர்ஜூன் நடிக்கும் “தேஷ் பக்தி” மசாலா திரைப்படம்!

வாசுதேவன்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சில தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பொதுத்துறை வங்கிகள் திரும்பி வராத கடன்கள் என்று 2004 இல் இருந்து 2015 ஆம் ஆண்டுவரை 2.11 லட்சம் கோடிகளை கணக்கிட்டுள்ளது. அந்த தொகையில் பாதிக்கும் அதிகமான 1,14,182 லட்சம் கோடிகள் 2013 இல் இருந்து 2015 வரையிலான காலங்களில் தள்ளுபடி செயப்பட்டுள்ளது. விகிதாச்சார கணக்கீட்டின் படி 2004 இல் இருந்து 2012 வரை 4 சதவிகிதமாக இருந்த இத்தகைய கடன்கள் 2013 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டு வரை 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இத்தகைய கடன்களை வங்கிவாரியாக கணக்கிட்டால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதல் இடத்தில் இருக்கின்றது. விவசாயத்திற்கு வங்கியிலிருந்து சொற்பக் கடன் வாங்கியவர்கள், விளைச்சல் இல்லாமல் திருப்பிக் கொடுக்கமுடியாமல் தற்கொலை செய்தவர்கள் அதிகம்.
ஆனால், வங்கியிலிருந்து அதிகம் கடன் வாங்கி திருப்பி தராதவர்கள் விவசாயிகளோ அல்லது மத்தியதர வர்க்கமோ இல்லை. விவசாயிகளும், மத்தியதர வ்ர்க்கமும் கடன் வாங்குவது ஆயிரங்களில் அல்லது லட்சங்களில் மட்டுமே.
சமீபத்திய புள்ளிவிவரப்படி,ரூ. 1 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பித் தராதவர்கள் 73 சதவீதம்.(Non Performing Assets). இதில் 30 பெரும் செல்வந்தர்கள் 1.21 லட்சம் கோடி திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறார்கள். ஸ்டேட் பேங்கில் மட்டும் 1000 பேர்கள் ரூ 11510 கோடி கடன் வாங்கி ஏமாற்றி உள்ளார்கள்.. இத்தகைய கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் தனிநபர்களா அல்லது நிறுவனங்களா என்ற கேள்விக்கு அது குறித்து தங்களிடம் தகவல் ஏதும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது . ரூ. 500 கோடியும் அதற்கு மேலும் வங்கிக் கடன் வாங்கி வசதியிருந்தும் திருப்பி கட்டாதவர்களின் பெயரை வெளியிட உச்ச நீதிமன்றம் பணிக்கிறது. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இவர்களின் விவரத்தை வெளியிடத் தயாரில்லை. நமக்கு வெளியே தெரிந்தது விஜய் மல்லையா. 9000 கோடி ரூபாயை பல வங்கியிலிருந்து கடனாக பெற்று திருப்பி தரமுடியாமல் தலைமறைவாக உள்ளார். இந்த மாதிரி மல்லையாக்களும், அம்பானிகளும், அப்பானிகளும் சாதாரண மக்கள் வங்கிகளில் டெபொசிட் செய்த பணத்தை கடன் வாங்கிய இந்த பணக்காரர்கள் திருப்பி தராமல் ஏமாற்றுகிறார்கள்..
ஆக இந்த கறுப்புப்பணம் , ரூபாய் நோட்டு செல்லாது என்பதெல்லாம் விஜயகாந்த் / அர்ஜூன் நடிக்கும் தாய் மண் “தேஷ் பக்தி” மசாலா திரைப்படம்…
  • கறுப்பு பணம் / ஹவாலா / வங்கிக் கடன் இதைப்பற்றியெல்லாம் நிதித் துறைகளில் பணியாற்றும் என் நண்பர்களிடம் உரையாட முடிந்தது. பல இணையதளங்களும் இந்தப் பதிவை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. thetimestamil.com

கருத்துகள் இல்லை: