மிழ் மக்களின் சுயமரியாதையை ஒழித்து அடிமைத்தனத்தைக் கற்றுத் தருவதில் பல பத்திரிகைகள் நம்பர் 1க்குப் போட்டி போடுகின்றன. 20.1.13 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ், “காத்திருக்கும் அரசியல் புயல்” என்று ரஜினியைக் குறித்து ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கவர் ஸ்டோரி என்றால் அது ஏதோ மிகப்பெரும் செய்தி அலசல் என்று நினைத்து விடாதீர்கள். இது “சுவாமி வம்பானந்தா” என்ற கிசுகிசு மாமாவின் பக்கத்தில் வருகிறது. ஜூனியர் விகடனின் கழுகுக்குப் போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த மாமா, சிஷ்யை எனும் பெண்பால் பாத்திரத்தின் மூலம் கவர்ச்சியுடன் வாரம் இரண்டு முறை மேல் மட்ட கிசுகிசுக்களை வாந்தி எடுக்கும் இழிவான ஜன்மம்.
ரஜினி, தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரசிகர்களை, புத்தாண்டில் சந்தித்து பேசினாராம். அப்போது இந்த வம்பானந்தா கூட இருந்த ரசிகர்களை சந்தித்து இந்த சேதிகளை தயாரித்து எழுதுகிறார். ரசிகர்களை சந்தித்த ரஜினி முழுக்க அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தாராம். ரசிகர்களுக்கு தெரிந்த அரசியல் அறிவில் கடுகளவு கூட தெரிந்திராத ரஜினி என்ன பேசியிருப்பார்? குஜராத்தில் நான்காவது முறையாக முதல்வர் பதவியைப் பிடித்த மோடியை உதாரணம் காட்டிய ரஜினி, “மோடி மக்களுக்காக நல்லது பல செய்தாலும் படுத்துக் கொண்டே ஜெயிக்க முடியவில்லை, கஷ்டப்பட்டுத்தான் ஜெயித்திருக்கிறார், இதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை” என்றாராம்.
இவர்கள் கிசுகிசுவாகவும், பரபரப்பிற்காகவும் செய்திகளை கேட்டோ இல்லை இட்டுக்கட்டியோ எழுதினாலும் உண்மையை ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. நரவேட்டை மோடியை சிலாகித்துச் சொல்லுமளவு ரஜினியின் இதயமும் பாசிசத்தின் செல்வாக்கில் இருப்பது ஒருபுறம். இன்னொரு புறம் அத்தகைய மோடி கூட படுத்துக் கொண்டே ஜெயிக்கவில்லை என்பதன் மூலம் ரஜினி என்ன கூற வருகிறார்?
அரசியல் என்பது நோகாமல் நொங்கெடுத்து வயிறார தின்ன வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம்.