ஹரேன் பாண்டியகுஜராத் மாநில அரசின் செயல்பாடுகளில் ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தாவை நியமிக்கும் உரிமை முதலமைச்சரான தன்னிடமே இருக்க வேண்டும் என்பதாக சட்டத்தை மாற்றும் மசோதா ஒன்றை நரேந்திர மோடியின் அரசாங்கம் அக்டோபர் 1-ம் தேதி நிறைவேற்றியிருக்கிறது.
குஜராத் ஆளுநர் கம்லா பேனிவால்
கம்லா பேனிவால்குஜராத்தின் லோக் ஆயுக்தா சட்டம் 1987-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேலால் கடந்த 1998-ம் ஆண்டு குஜராத்தின் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சோனி 2003-ம் ஆண்டு பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு வேறு எவரும் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படவில்லை. அதாவது நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த 2003-ம் ஆண்டிலிருந்து இன்று வரை அம்மாநிலத்தில் ‘ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யும்’ லோக் ஆயுக்தா நியமிக்கப்படவில்லை.
லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளின் மேல் நம்பிக்கை வைக்குமளவு அவை செயல்படுவதில்லை. மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் வரையறையின்றி சூறையாட வகை செய்யும் பொருளாதாரக் கொள்கைகள் என்கிற அடிக்கொள்ளி எரியும் வரை ஊழல் எனும் நுனிக் கொள்ளியும் எரிந்து கொண்டு தான் இருக்கும். என்றாலும், ஊழல் எதிர்ப்புப் போராளிகளும், நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினரும் இது போன்ற சட்டவாத நடவடிக்கைகளின் மூலமே ஊழலை ஒழித்துக் கட்டி விடலாம் என்று நம்புகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி எல்லா மாநிலங்களும் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. எனவே, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா நியமிக்கப்படவில்லை. கருநாடகா, குஜராத் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறையில் உள்ளது.