திங்கள், 21 பிப்ரவரி, 2011

வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி


நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அய்யன் திருவள்ளுவர் விழாவுக்கு வாழும் வள்ளுவப் பெருந்தகை வந்திருந்தார். ஆனால் அவர் வாய்திறந்து குறளோவியத்தை அள்ளித் தெளிப்பதற்குள் நான் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். அப்போது தன்னை ‘வாழும் வள்ளுவன்’ என்றெல்லாம் வாழ்த்தக்கூடாது என்று கருணாநிதி கடிந்துகொண்டதாகக் கேள்வி.
மிக்க நல்லது.
ஆனால் கலாசார மாற்றம் அப்படியெல்லாம் ஓரிரவில் நடந்துவிடக்கூடியதா என்ன? கடந்த சில பத்தாண்டுகளில் தமிழகத்தில் நடந்திருப்பது என்ன? மேடைகளில் நடப்பது சாதாரணப் புகழ்ச்சியா என்ன? காதுகள் இரண்டும் வலிக்க வலிக்க, கதற்கக் கதற நிகழ்த்தப்படும் வன்புகழ்ச்சி. அப்படி காது குளிரப் புகழ்ந்தால் நமக்கும் நாலு நல்லது நடக்கும் என்று நம்பத்தொடங்கும் காக்கைகள் கா கா என்று கரைவது இயல்பே. இதன் விளைவாக மேடையில் ஏற்றப்படும் நிஜமான அறிஞர்கள்மீது சுமத்தப்படும் அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களும் புகழ்ந்து தள்ளவேண்டும். இல்லாவிட்டால் என்ன ஆகிவிடுமோ என்ற பயம்.
இதில் சொந்தத் தொலைக்காட்சிகள் செய்யும் ஆபாசம் கொஞ்சநஞ்சமல்ல. கலைஞரின் உடலில் அதிகப் புண்ணியம் செய்திருப்பது இடதுகைக் கட்டைவிரலா, வலதுகால் சுண்டுவிரலா என்று பட்டிமன்றம் நடத்திக் கொஞ்சுவது அதில் தலையாய ஒன்று. இந்தக் கூத்தில் சொந்தக் கட்சிக்காரர்கள் தாண்டி தோழமைக் கட்சிக்காரர்களும் சேர்ந்துகொள்வார்கள்.
சரி போகட்டும். கருணாநிதியே சொல்லிவிட்டாரே, இன்று முதலாவது இந்த வாழும் வள்ளுவமே, காவியமே, கற்பகமே எல்லாம் அடங்கிப்போய்விடும் என்று பார்த்தால் அது எப்படி?
சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள் அன்று நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, பொது நூலக இயக்குனர் அறிவொளி, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மேயர் சுப்பிரமணியனும் கயல் தினகரனும் கட்சிக்காரர்களுக்கே உரித்த தன்மையோடு கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளினர்.
கயல் தினகரன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவலைச் சொன்னார். ஜெயலலிதா ஆட்சியில், நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மதன் எழுதிய ‘வந்தார்கள்… வென்றார்கள்…’ புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாராம். மற்றபடி தமிழகத்திலேயே அண்ணாதுரைக்கு அடுத்து கருணாநிதிதான் படிப்பில் சிறந்து விளங்கும் முதல்வராம். (ஆக, முதல் இரு இடங்கள் உறுதியாகிவிட்டன. ராஜாஜி முதல் பிறர் மூன்றாவது இடத்துக்கு வேண்டுமென்றால் போட்டி போட்டுக்கொள்ளலாம்.)
இப்படித் தொடர்ந்த பேச்சைத் தாங்கமுடியாது, நேராக ‘கலைஞர் செய்திகள்’ சானலில் ‘ஒரு மணியில் ஒரு நாள்’ நேரலை நிகழ்ச்சியில் கிரிக்கெட் பற்றி உரையாடச் சென்றுவிட்டேன்.
மேயர் சுப்பிரமணியன் சொன்னதில் ஒரு உருப்படியான விஷயம். சொத்து வரிமீது வசூலிக்கப்படும் மீவரி (நூலகத்துக்குச் செல்லவேண்டியது) சுமார் 40 கோடி சென்னை மாநகராட்சி தரவேண்டியது இன்னும் நிலுவையில் உள்ளது என்று அறிவொளி கூறியிருந்தார். அதனை உடனடியாகத் தருவதோடு, இனி ஒவ்வோர் ஆண்டும் இந்த நிலை ஏற்படாது உடனடியாகத் தந்துவிடுவதாக வாக்களித்துள்ளார் மேயர். இதனை குடிமக்களாகிய நாம்தான் கண்காணிக்கவேண்டும்.
*
இன்று இறுதி நாள் ஆனதால், நடைபாதைக் கடைகளைப் பார்வையிட்டேன். இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது. முதலில் ஒரு கடையில் பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களாக அழகாக அடுக்கிவைத்திருந்தார் கடைக்காரர். அவரைப் பார்த்தால் படித்த நபராகத் தெரியவில்லை. குத்துக்காலிட்டு பீடி பிடித்தபடி இருந்தார். ஆனால் அவ்வளவு சரியாக அவர் புத்தகங்களை அடுக்கியிருந்தது வியக்கத்தக்கதாக இருந்தது. எப்படி அவருக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன என்று விசாரித்தேன். தெளிவான பதில் கிடைக்கவில்லை.
பைரேட் செய்யப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. ராமச்சந்திர குஹாவின் இந்தியா ஆஃப்டர் காந்தி, அமர்த்தியா சென்னின் தி ஐடியா ஆஃப் ஜஸ்டிஸ், நந்தன் நீலகெனி, நாராயண மூர்த்தி என்று எக்கச்சக்கமான புத்தகங்கள் இப்படி. இதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
பிற அனைவரும் பழைய புத்தகங்களை 20 ரூ, 30 ரூ, 50 ரூ என்று கூவி விற்றுக்கொண்டிருந்தனர். அவற்றில் ஒருசிலவே மாணிக்கங்கள், மீதம் உபயோகமற்றவை. உட்கார்ந்து தேடினால் மட்டுமே நல்லவை கிடைக்கும். நான் ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டேன். காவ்யாவின் பல புத்தகங்கள் கிடைத்தன. ஒரியண்ட் பிளாக்ஸ்வான் முன்னொரு காலத்தில் போட்ட தமிழ்ப் புத்தகங்கள் சில கருக்கழியாமல் கிட்டத்தட்டப் புதிதாகக் கிடைத்தன.
*
இந்தப் புத்தகக் கண்காட்சியின் சிறந்த இரண்டு நாள்கள் முதல் வார இறுதிதான். அதாவது 8, 9 ஜனவரி 2011. அந்த நாளில்தான் பெரும்பாலும் அனைத்துக் கடைக்காரர்களும் தங்கள் சிறந்த விற்பனையைப் பார்த்திருப்பார்கள். பொதுவாக இரண்டாவது சனி, ஞாயிறுதான் எல்லாப் புத்தகக் கண்காட்சிகளிலும் சிறப்பானவையாக இருக்கும். இம்முறை பொங்கல் காரணமாக அது தடைப்பட்டுள்ளது என்பதே என் கருத்து.
*
ஒரு முக்கியமான பரிசோதனையை இந்த ஆண்டு பபாஸி செய்து பார்க்கவேண்டும். ஆறு மாதம் கழித்து ஜூன், ஜூலை மாதவாக்கில், நந்தம்பாக்கம் சென்னை டிரேட் செண்டரில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்தவேண்டும். ஒரேயடியாக ஜனவரி கண்காட்சியை அங்கே எடுத்துக்கொண்டு போகவேண்டியதில்லை. ஆண்டுக்கு இரு புத்தகக் காட்சிகளை சென்னையில் எளிதாகச் செய்யலாம். தென் சென்னை ஆசாமிகள் வருவதற்கு எளிதாக இருக்கும்.
இதனை இம்முறை வலியுறுத்திப் பேசப்போகிறேன். வேறு சிலருக்கும் இதேபோன்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது.
*
ஹரன்பிரசன்னா சொன்னதுபோல, ஒவ்வொரு தினமும் விடாது எழுதுவது, அதுவும் இரவில் நெடுநேரம் விழித்திருந்து செய்வது அசதியாக உள்ளது. ஆனால் எடுத்துக்கொண்டுவிட்டோமே என்றுதான் ஓட்டினேன். படித்திருக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றியிருக்கும். இன்றுடன் நிறைவுபெறுகிறது இந்தத் தொல்லை. இனி, பிற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக்

மலேசியாவில் இருந்து கலைவேட்கை கொண்டு ஓர் இளைஞன் சென்னையில் கால் பதிக்கின்றான்.  எந்தவிதமான செல்வாக்கும், கலைப்பின்னணியும் இல்லாத ஒரு புது இடத்தில்தான் அவன் பாடகனாகத் தன் சுற்றை ஆரம்பிக்க வேண்டிய சவால். அவனுக்குத் தேவை ஒரு நல்ல வாய்ப்பு. டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் அவனுக்குப் பாடவாய்ப்புக் கிடைக்கின்றது. அதுவும் கிணற்றில் போட்ட கல்லாய் வெளிவராத பாட்டாக அமைந்து விடுகின்றது.  ஒரு நல்ல திருப்பத்துக்காகக் காத்திருந்த அவனுக்கு “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்ற 16 வயதினிலே படப்பாடல் அமைந்து விடுகின்றது. ஒரு வெள்ளந்தித்தனமான அந்தக் குரலே பட்டிதொட்டியெங்கும் அந்தக் கலைஞன் யாரென்று திரும்பிப் பார்க்க வைத்து விடுகின்றது.
அந்தப் பாட்டில் ஆரம்பித்த சுற்று, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அங்கீகரிக்கப்படுகின்றார். அவர் தான் மலேசியா வாசுதேவன்.
எண்பதுகளிலே ரஜனி – கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலகின் அடுத்த போக்கைத் தீர்மானிக்கும் நட்சத்திரங்களாக  உயர்ந்து நிற்கின்றார்கள். கமல்ஹாசனின் நகலாக அச்சொட்டாகப் பொருந்திப்போய் விடுகின்றது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். ஸ்டைலாக,  நடிப்பிலங்கணங்களைக் கடந்த எதார்த்தமான ரஜினிகாந்தின் குணாம்சத்துக்குப் பொருந்திப் போக ஒரு குரல் தேவைப்படுகின்றது. அந்த வேளை மலேசியா வாசுதேவனின் குரல் தான் சூப்பர் ஸ்டாராக மாறிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அணி செய்யும் விதத்தில் அமைந்து விடுகின்றது.
உதாரணமாக தர்மயுத்தம் படத்தில் வரும் தங்கை செண்டிமெண்ட் பாடல் “ஒரு தங்க ரதத்தில் என் மஞ்சள் நிலவு”, அதே படத்தில் வரும் “ஆகாய கங்கை” என்ற காதல் பாட்டு. இந்த இரண்டு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியியிருக்கும் பாணியைக் கவனித்தாலே போதும், ரஜினிகாந்த் என்ற எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு இந்தக் குரல் எவ்வளவு தூரம் நெருங்கி ஒத்துழைத்திருக்கின்றது என்று.
ஒரு காலக்கட்டத்தில் டி.எம். செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது. எண்பதுகளில் வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களிலே மலேசியா வாசுதேவன் குரல் தான் அவருக்கான குரலாகப் பொருந்தியிருக்கின்றது. குறிப்பாக, முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.
நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார்.  குறிப்பாக கைதியின் டயரி என்ற படத்தில் ஆரம்பித்து முதல் வசந்தம், ஊமை விழிகள் என்று மலேசியா வாசுதேவனுக்கான பாத்திரங்களைச் சிறப்பாகவே செய்து அதிலும் தன் முத்திரையைக் காட்டியவர்.
சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம். சாமந்திப்பூ படத்தில் தானே இசையமைத்துப் பாடிய “ஆகாயம் பூமி” பாட்டைத் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.பி.சைலஜா பாடிய “மாலை நேரம்” பாடல் வந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி ஒலிபரப்பிச் சலிக்காத பாடலாக இருந்தது.
1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க “நீ சிரித்தால் தீபாவளி” படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமா ரமணனோடு பாடிய “இந்த அழகு தீபம்” பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார்.  “மாமனுக்கு மைலாப்பூரு தான்” (வேலைக்காரன்) பாட்டிலே வெளிப்படும் எள்ளல் குரல், “எங்கெங்கும் கண்டேனம்மா” (உல்லாசப்பறவைகள்) பாட்டில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தித்தனமாக இன்னொரு குரல், “கோடை காலக் காற்றே” (பன்னீர் புஷ்பங்கள்) பாட்டில் வரும் மென்மையாக ஒலிக்கும் குரல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், இவரது குரலின் பரிமாணங்களை.
எண்பதுகளின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும் போது மலேசியா வாசுதேவனுக்கான பக்கங்கள் தனியாக ஒதுக்கப்படவேண்டியவை. இது அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி செலுத்தப்படவேண்டிய தருணம்.

லிபியாவில் பெரும் வன்முறை: 140 பேர் பலி.


லிபியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இறந்தவர்களையும் சேர்த்து கடந்த 4 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் மொம்மர் கடாபி. இந்த நூற்றாண்டில் அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சர்வாதிகளுள் இவரும் ஒருவர்.

டுனீஷியா மற்றும் எகிப்தில் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆட்சி மாற்றங்களின் விளைவாக இப்போது லிபியாவிலும் ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டத்தை அடக்க அதிபர் கடாபி ராணுவத்தை ஏவியுள்ளார். அவர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். நேற்று லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெங்காஷி நகரில் போராட்டத்தில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது அதில் ஈடுபட்ட மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது ராணுவம்.

இதில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த 4 தினங்களில் இறந்தவர் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 140 என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள்.

இருந்தும் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. தீவிரம் அடைந்துள்ளது. மேலும் அங்கு நேற்று மாலை 2 மணியிலிருந்து இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது. வெளியுலகத் தொடர்புகளை முற்றாக நிறுத்தவும் ராணுவம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, வீடு விடாக புகுந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்க கடாபியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பதட்டத்தில் உள்ளன.

இந்தப் போராட்டம் காரணமாக, லிபியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் திருப்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளன. பல நாடுகள் லிபியாவில் உள்ள தங்கள் மக்கள் பத்திரமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.

லிபியாவில் இந்தியர்கள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.