ரூ.500, 1000 செல்லாது ! மோடியின் கருப்புப் பணமோசடி !
ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம் ?
கருப்புப் பண முதலைகளின் எந்தவகை முதலீடுகளையும் முடக்காது.
சாமானிய மக்களின் சேமிப்பையும் சம்பளத்தையும் வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல் !
கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி ரூபாய் !
இந்த மோசடிப் பேர்வழிகளின் பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடியா, கருப்புப் பணத்தை மீட்கப் போகிறார் ?
ரொக்கப் புழக்கம் சுற்றும் லஞ்சம் எல்லாம் கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனை, இதர அரசு அலுவலகங்களில்தான். ஊழல் எனப்படும் உயர் மட்ட கொள்ளைகளில் இந்த ரொக்க புழக்கம் தேவையே இல்லை. அது பினாமி சொத்துக்களாகவும், வரியில்லா நாடுகளில் வங்கிக் கணக்காகவும், வரியில்லா தீவுகளில் பினாமி தொழில் நிறுவன பங்குகளாகவும் இன்னும் எண்ணற்ற வழிகளில் செயற்படுகின்றன. இனி வரும் தேர்தல் காலங்களில் மோடியின் நடவடிக்கை ஒரு வெங்காயத்தையும் ஒழித்து விடாது. ஏற்கனவே ஒரு வாக்குக்குக்கு 500, ஒரு குடும்பத்திற்கு 2000 என்று இருப்பதை இனி கூப்பன்களாகவோ, சேவைகளாகவோ கொடுத்து விட்டால் போதும். இவற்றை கொடுக்கல் வாங்கல் இல்லாமலே கூட சட்டப்பூர்வமாக செய்யமுடியும். ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜனே தமிழகத்தின் தேர்தலில் சில ஆயிரம் கோடி புழங்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதை இங்கே நினைவு கூர்க.
இதைத்தாண்டி ஜெயா கும்பல் பகிரங்கமாக கொடுக்கும் பணத்தை என்ன செய்ய முடியும்? திருப்பூர் கன்டெயினர் விவாகரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய மலை முழுங்கி கொள்ளை நடக்கும் நாட்டில் இந்த செல்லாத 500 ரூபாய் நோட்டு நாடகம் யாரை தண்டிக்கும்? இனி இந்தியாவில் லஞ்சம், ஊழல், மற்றும் அரசியல்வாதிகளின் பணத்தேவைகளை சட்டப்பூர்வமான பெயரில் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து சேவை செய்யும் உள்நாட்டு ஹவாலா நிறுவனங்கள் வரும்.
மோடியின் அறிவிப்பால் நேற்றிரவு இரவு உணவு இல்லாமல் அதாவது 500 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் பட்டினி கிடந்தோர் பலர். அன்றாடக் கூலி வேலைகளுக்கு மாலையில் கொடுக்க சில்லறை இல்லை என்பதால் பல நூறு கட்டிடத் தொழிலாளிகள் வேலை இழந்திருக்கின்றனர். சில்லறை பிரச்சினைகளுக்காக சிறு வியாபாரிகளும், அன்றாடம் அண்ணாச்சி கடைகளில் வாங்கும் சாதாரண மக்களும் சொல்லணாத் துயரங்களை அடைந்திருக்கின்றனர்.
இவண்
மக்கள் அதிகாரம்
சென்னை – 91768 01656
தகவல்
மக்கள் உரிமை பாதுக்காப்பு மையம்
மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக