சாதி வெறி கூட்டணிமிழ்நாட்டை பீடித்திருக்கிறது ஒரு பாசிச அரசியல் கும்பல். சில ஆயிரம் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை வைத்து கட்சி நடத்தி வரும் ராமதாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, தனது மகனை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விடும் உத்தியை வந்தடைந்திருக்கிறார்.
இந்திய அளவில் இந்துத்துவா சக்திகள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை நாட்டின் எதிரிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து செயற்கையான எதிரியை உருவாக்குவது போல, தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஆதிக்க சாதி குடும்பங்களின் எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் ராமதாசின் தலைமையிலான வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும்.
“தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு வந்து வேறு சாதி பெண்களை மயக்கி காதலித்து திருமணம் செய்து விடுகிறார்கள்” என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஊர் ஊராக போய் நடத்தி வருகின்றார் ராமதாஸ்.
2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு விழா மாநாட்டில் “வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” என்று காடுவெட்டி குரு பேசினார்.