திங்கள், 7 நவம்பர், 2016

5 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணின் முன்ஜாமீன் தள்ளுபடி


முகநூலில் நண்பராகி அடுத்தடுத்து 5 பேரை திருமணம் செய்த பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேனியைச் சேர்ந்தவர் பாண்டியன். முந்தைய திருமணங்களை மறைத்து தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, ரூ.15 லட்சம் வரை வாங்கி மோசடி செய்ததாக கரூரைச் சேர்ந்த அனுசுயா (27) மீது தேனி காவல் நிலையத்தில் பாண்டியன் புகார் அளித்தார். இந்தப்புகாரின் பேரில் அனுசுயா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அனுசுயா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 6.9.2016ல் இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் 7.10.2016 வரை இடைக்கால முன்ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அனுசுயாவின் முன்ஜாமீன் மனு மீதான இறுதி விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் நடைபெற்றது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடும்போது மனுதாரருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது போது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை அவர் கடைபிடிக்கவில்லை. மனுதாரர் புகார்தாரர் பாண்டியனுடன் முகநூலில் மூலம் நண்பராக சேர்ந்துள்ளார். முகநூலில் இருவரும் காதலித்துள்ளனர். அனுசுயா தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், இந்தியா வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து பாண்டியனிடம் பணம் பறித்துள்ளார்.
அனுசுயா ஏற்கெனவே பல ஆண்களை மணந்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். திருமணம் செய்து பணம் பறிப்பதையே அவர் தொழிலாக வைத்துள்ளார். மனுதாரர் மீது இதுவரை 4 பேர் புகார் அளித்துள்ளனர். அதில் 2008, 2011ல் தலா ஒரு வழக்கும் மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது பாண்டியன் 5வது புகார் அளித்துள்ளார் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
‘நான் அவன் இல்லை’ என்ற தமிழ் சினிமாவில் கதாநாயகன் நான்குவிதமாக கதாபாத்திரங்கள் வந்து 4 பெண்களை ஏமாற்றுவார். இந்த வழக்கில் மனுதாரர் ஒரு பெண். அவர் ஒருபடி முன்னேறி 5 ஆண்களை மணந்து, ‘நான் அவள் இல்லை’ என பெயர் பெற்றுள்ளார். இதிலிருந்து மோசடி செய்வதில் ஆண், பெண் பாகுபாடு இல்லை என்பதை மனுதாரர் நிரூபித்துள்ளார்.
இந்த உண்மைகளையும், மனுதாரர் மீதான வழக்கின் சூழல்களையும், இடைக்கால முன்ஜாமீன் வழங்கியபோது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை கடைபிடிக்காததை கருத்தில் கொண்டும் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுக்கிறது. புகார்தாரரிடம் மனுதாரர் போல் வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளாரா? என்பதை கண்டறிய மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இதனால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: