சிக்ஸ் பேக்ஸ் மற்போர் வீரனின் கட்டுடலுக்கு ஊத்தை உடம்பு இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் தலையைப் பொருத்தி ஓவியம் வரைந்து வைத்துக் கொள்வதாக ஒரு காட்சி அத்திரைப்படத்தில் வருகிறது.
அதைப் போல உல்லாச, ஊதாரி, சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் இம்சை அரசி 24ஆம் புலிகேசியான செல்வி ஜெயலலிதாவை சிறந்த அறிவாளி, துணிச்சல்காரி, நிர்வாகத் திறமைசாலி என்ற பொய்யான சித்திரம் வரையப்படுகிறது.
ஆனால், இவரது ஆட்சியில் மின் பற்றாக்குறையில் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொழிலகங்களின் இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; அலுவலகங்களில் ஒட்டடைகள் படிகின்றன; கோப்புகள் தூசு மண்டிப் போயுள்ளன; சாலைகள் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போயுள்ளன; சாலைகளில் சாக்கடைகள் ஆறாக ஓடுகின்றன; குப்பைக் கூளங்கள் மலைகளாகக் குவிகின்றன.