மின்னம்பலம்: பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி வழங்கப்படுவதாகப்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது . இதையடுத்து பட்ஜெட் தேர்தல் அறிக்கை போல உள்ளதாகவும், ஓராண்டுக்கான பட்ஜெட்டில் ஐந்தாண்டுத் திட்டங்கள் அறிவிக்க பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவில்லை என்று கூறி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி, "பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் மத்திய அரசின் மூலம் கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி குறைவாக வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பாஜக அணுகுகிறது" என்று குற்றம் சாட்டினார்.