மின்னம்பலம்: பிரகாசு :சென்னை வாரத்தில் சென்னையின் வரலாறு தேடி...
சர்
ஏ.டி.பன்னீர்செல்வம் பூங்கா, நடேசன் பூங்கா, பனகல் பூங்கா,
சர்.பி.டி.தியாகராயர் அரங்கம், பனகல் மாளிகை, சவுந்திர பாண்டிய பஜார்
(இப்போது பாண்டி பஜார்) போன்றவை சென்னையில் பிரபலமான இடங்கள். அதேபோல
தியாகராய நகர், ஏ.கே.சண்முக செட்டியார் சாலை, டி.எம்.நாயர் தெரு, நடேசன்
சாலை, எம்.சி.ராஜா தெரு, சைவ முத்தையா தெரு, உஷ்மான் சாலை, சுப்பராயன் சாலை
போன்ற பெயர்களும் சென்னை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இதுமட்டுமின்றி
தியாகராயர் சிலை, பனகல் அரசர் சிலை, சுந்தரராவ் நாயுடு சிலை, நடேசன் சிலை,
டி.எம்.நாயர் சிலை, முத்தையா முதலியார் சிலை போன்றவையும் சென்னையில்
இருக்கின்றன. இவர்களெல்லாம் யார்? எதற்காக சென்னை முழுவதும் இவர்களின்
பெயர்கள் வைக்கப்பட்டுள்ள சாலைகளும், பூங்காக்களும், கட்டடங்களும்
நிறைந்துள்ளன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா?
சென்னை வாரத்தை
சென்னை வாழ் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வரலாற்றில்
கலந்திருக்கும் இவர்களையும் சற்று அறிவோம். சென்னையைப் பற்றிச் சொல்வதற்கு
ஆயிரமாயிரம் இருந்தாலும் சென்னையிலிருந்து தவிர்க்க முடியாத அடையாளம்
நீதிக் கட்சியும், அதன் வரலாறும். இன்றைய தலைமுறையினர்கள் பலருக்கு நீதிக்
கட்சி என்றொரு கட்சி இருந்ததே கூட தெரியாமலிருக்கலாம். ஆனால் சென்னையில்
வாழும் இன்றைய இளைய தலைமுறையினர் நீதிக் கட்சித் தலைவர்களின் பெயர்களை
உச்சரிக்காமல் சென்னையில் ஒரு நாளைக் கடப்பது என்பது கூட அரிதுதான்.
ஆம்,
மேலே சொல்லப்பட்ட அனைவரும் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களாக
விளங்கியவர்கள். தமிழகம் கண்டிருக்கும் சமூக நீதிக் கோட்பாட்டிற்கு
அடித்தளமிட்டவர்கள் இவர்கள்.