savukkuonline.com"
இந்த பணத்தை பெங்களுருக்கு சென்று குமாரசாமியிடம் சேர்த்தது, சென்னையைச்
சேர்ந்த வைர வியாபாரி கீர்த்திலால் மற்றும் டாக்டர் சிவக்குமார். இந்த
ஆபரேஷனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தேவையான வசதிகளை செய்து கொடுத்தது,
மக்கள் டிஜிபி ராமானுஜம்
“என் வாழ்க்கையில் இது போல வேதனை ஏற்படுத்திய ஒரு பொது நிகழ்வை நான்
பார்த்தே கிடையாது. மிகவும் மோசமான ஒரு கையறு நிலையில் இருந்ததாக
உணர்ந்தேன்” என்று கூறினார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.
அந்த மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்ட நிகழ்வு, ஜெயலலிதாவின்
பதவியேற்கும் நிகழ்வு. “அப்பட்டமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு
உயர்நீதிமன்ற நீதிபதி கூட்டலைக் கூட சரி பார்க்காமல் தீர்ப்பளிக்கிறார்,
அதைக் கண்டு ஊரே நகைக்கிறது. ஆனால், கொஞ்சமும் கூச்சமில்லாமல் அந்த
தீர்ப்பின் அடிப்படையில், முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார் ஜெயலலிதா. அதை
இந்த தேசத்தின் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
நீதிப் பிறழ்வு என்று உரக்க குரல் கொடுக்க வேண்டிய ஊடகங்கள், அவரின்
இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்று கணக்கிட்டுக்
கொண்டிருக்கின்றன” என்றார்.
அவர் வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.
1975ல், தேர்தல் ரத்து செய்யப்பட்ட பயத்தில், நெருக்கடி நிலையை
பிறப்பித்து, இந்தியாவை இந்திரா காந்தி இருளில் தள்ளினார் இந்திரா காந்தி.
அடிப்படை உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன என்று அறிவித்தார்.
இந்தியாவின் பல மாநில உயர்நீதிமன்றங்கள், அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய
முடியாது என்று தீர்ப்பளித்தன. சில நீதிமன்றங்கள், கைது செய்யப்பட்டவர்களை
விடுதலையும் செய்தன. இத்தீர்ப்புகளை தெளிவுபடுத்தக் கோரி,
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. “ஏடிஎம் ஜபல்பூர்” என்று பிரபலமாக
அன்று அழைக்கப்பட்ட வழக்கில், ஐந்து நபர் கொண்ட நீதிபதிகள் அமர்வு
தீர்ப்பளித்தது.
“27 ஜுன் 1975 நாளிட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி, எந்த
நபருக்கும், அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 226ன் கீழ் ஒருவரை கைது செய்து
சிறையில் அடைத்தால், அந்த கைது தவறாக இருந்தாலோ, விதிகளை மீறி இருந்தாலோ,
சட்டவிரோதமாக இருந்தாலோ, அல்லது உள்நோக்கத்தோடு பிறப்பிக்கப்
பட்டிருந்தாலோ, உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலோ, அதை எதிர்த்து
ஆட்கொணர்வு மனுவோ, அல்லது ரிட் மனுவோ தாக்கல் செய்ய இயலாது” என்று
தீர்ப்பளித்தனர்.
ஆனால், அந்த ஐந்து நபர் நீதிபதிகளில் ஒருவரான எச்.ஆர்.கண்ணா, இதை
எதிர்த்து தீர்ப்பு எழுதினார். அவரின் தீர்ப்பு குறித்து, தலையங்கம் எழுதிய
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, இந்தியா, மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு
திரும்பி, ஒருவருக்கு நினைவுச் சின்னம் எழுப்புமேயானால், அது எச்.ஆர்
கண்ணாவுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதியது. அன்று
இந்திராவுக்கு எதிராக முதுகெலும்போடு இருந்த ஒரே நீதிபதியாக இருந்தார்
நீதியரசர் எச்.ஆர்.கண்ணா.