மகாமூடனும் மகாஞானியும்தான் வாயைப் பொத்திக் கொண்டு பேசாமலிருப்பார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் நிதின் கட்காரியைப் பொருத்தளவில் அவரது வாயில் ஆர்.எஸ்.எஸ் டவுசர்களால் பிரத்யேகமாக வடிவமைத்து அடித்து சொருகப்பட்டிருந்த ஆப்பு தற்போது லேசாக ஆடத் துவங்கியிருப்பதால் சில உண்மைகள் தவிர்க்கவியலாமல் அம்பலமாகியுள்ளது.
நிதின் கட்காரியால் ஆரம்பிக்கப்பட்ட பூர்த்தி பவர் மற்றும் சர்க்கரை ஆலை, ஐடியல் ரோடு பில்டர் எனும் நிறுவனத்திடம் இருந்து முறைகேடான வழிமுறைகளில் நிதி பெற்றுள்ள விவகாரம் அம்பலமானது. நிதின் கட்காரி மகாராஷ்டிர மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் போது ஐடியல் நிறுவனத்திற்கு பல்வேறு உட்கட்டமைப்பு வேலைகளை நிறைவேற்றித் தரும் காண்டிராக்டுகளை வாரி வழங்கியிருந்ததும், அதற்குக் கைமாறாக ஐடியல் நிறுவனம் கடன் என்கிற பெயரில் இவருக்கு லஞ்சம் வழங்கியிருந்ததன் விவரங்களும் ஒவ்வொன்றாக வெளியாகத் துவங்கியது.
அதைத் தொடர்ந்து பூர்த்தி நிறுவனத்தில், பங்குதாரர்கள் என்று சுட்டப்பட்ட முகவரிகள் டுபாக்கூர் என்பதும் அந்நிறுவனத்தில் கட்காரியின் கூட்டுப்பங்காளியாக அவரது கார் ஓட்டுனரே இருப்பதும் வெளியானது. இந்நிலையில்,  இதற்கெல்லாம் விளக்கமளிக்க நிதின் என்.டி.டி.வி தொலைக்காட்சியின் அரங்கத்தில் எழுந்தருளினார்.
அங்கே நிதின் கட்கரியைத் தண்ணி தெளித்து தெளிய வைத்து தெளிய வைத்து கும்மிய கண்கொள்ளாக் காட்சியை நீங்கள் இந்த இணைப்பில் பார்க்கலாம் –