சனி, 12 நவம்பர், 2016

அ.தி.மு.க.,வினரிடம் ரூ.50, ரூ.100 தாராளம் :டாஸ்மாக் மற்றும் அரசு நிறுவனங்கள் வசூல் வாரி சுருட்டல்!

கரூர்: மூன்று தொகுதி தேர்தல் பணப்பட்டு வாடாவுக்காக, அரசுத்துறை நிறுவனங்களில், வசூலான, 50, 100 ரூபாய் நோட்டுகளை, அ.தி.மு.க.,வினர் வாங்கி பதுக்கியதாக புகார் எழுந்து உள்ளது. திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடப்பதால், பணப் பட்டுவாடா உள்ளிட்ட செலவுகளை சரிகட்ட, பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஆளுங்கட்சியினர் திண்டாடினர். கடந்த, 8ல், நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்ததால், சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. தேர்தல் செலவுக்காக, 100, 50 ரூபாய் கிடைக்காமல், அ.தி.மு.க., பொறுப் பாளர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நேற்று முதல், அ.தி.மு.க., தரப்பில், 100, 50 ரூபாய் நோட்டுகள் தாராளமாக பட்டு வாடாசெய்யப்படுகிறது. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், நோட்டுகள் இல்லாமல் தடுமாறும் நிலையில், அ.தி.மு.க.,வினருக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என, அவர்கள் புலம்பி வருகின்றனர்.


இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடை, ரேஷன் கடை மற்றும் அரசு பஸ்களில் வசூலாகும் தொகையில், 100, 50 ரூபாய் நோட்டுகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதற்கு மாற்றாக கொடுக்கப்படும், 500,1,000 ரூபாய் நோட்டுகள் சம்பந்தப்பட்ட துறையினர் மூலம், வங்கியில் செலுத்த அறி வுறுத்தப்பட்டது. இதனால், கோடிக் கணக்கில், 100 ரூபாய் நோட்டுகள் கைமாறியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும், ஒரு நாளைக்கு, அரசு பஸ்களில், 20 கோடி ரூபாய் வரை வசூலாகும். இந்த தொகையில், 100, 50 ரூபாய் நோட்டுகளை பிரித்து, அ.தி.மு.க., வினரிடம் வழங்கப்பட்டது.

அவர்கள், அதற்கு பதிலாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். நேற்றிரவு வரை, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டதால், இதை வாய்ப்பாக பயன்படுத்தி வாங்கிச் சென்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: