ஜெயமோகன்
சீமைச்சாராயத்திற்கும், அரவிந்த ‘சாமியின்’ ஆரோவில் ஆன்மீக மணத்திற்கும் புகழ் பெற்ற பாண்டிச்சேரியில் இருந்து நமது விசாரணையைத் துவங்க வேண்டியிருக்கிறது.
மலையாள சினிமா வேலையின் பொருட்டு பலநாட்களாக கேரளத்தில் இருக்கும் ஜெயமோகன் திருவனந்தபுரத்தில் விமானம் பிடித்து சென்னை வந்து, காரில் புதுச்சேரி செல்கிறார். அங்கே அவரது ‘வாசகர்’ சுனில் கிருஷ்ணனது திருமணம். அதில் பங்கேற்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் மற்றும் ஜெயமோகனது அபிமானிகள் ஒரு 25 பேரும் வருகின்றனர். ஜமா களை கட்டுகிறது.
முதலில் ஒன்றைச் சொல்லிவிடுவோம். ஜெயமோகனது ஊட்டி குருகுல கோடைக்கால முகாமிற்கு வருவதற்கே ஏகப்பட்ட கண்டிஷன்கள் உண்டு. அந்த நிபந்தனைகளை ஏற்றுச் செல்ல விரும்பும் அப்பிராணிகளின் நிலை குறித்து வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம். அது போல ஜெயமோகனது உள்வட்டத்தில் பங்கேற்றால்தான், நான்ஸ்டாப்பாக அவர் பேசும் (எல்லாம் ஏற்கனவே எழுதியவைதான்) கீறோபதேசத்தை (கீறோபதேசம் – கீறல் விழுந்த ரிக்கார்டு பிளேயர்) கேட்கும் பாக்கியம் உண்டு. சரி அண்ணனது உள்வட்டத்தில் பங்கேற்க என்ன தகுதி வேண்டும்?
ஒன்று அவர் எழுதிய ஏதாவதொன்றை படித்திருக்க வேண்டும். பிறகு அப்படி படித்ததை உள்ளொளி, தரிசனம், ஏகப்பட்ட திறப்பிற்கு காரணம் என்று எழுதியோ, பேசியோ அண்ணனது காதடியிலோ இல்லை கண்ணடியிலோ சமர்ப்பிக்க வேண்டும். அப்புறம் அண்ணன் அவற்றை இழுத்து இன்னும் கொஞ்சம் பேசி தீட்சை அளிப்பார். பிறகென்ன, அவரது வீட்டு நாயை கொஞ்சும் பாக்கியத்திலிருந்து அருகர் பாதையை அளந்து போகும் மகா பாக்கியம் வரை கண்டிப்பாக கிடைக்கும். ஆனாலும் கண்டிஷன்ஸ் அப்ளை உண்டு. அது, அன்னாரது கிச்சன் கேபினட்டில் நீடிக்க வேண்டுமென்றால் சாகும் வரை காதுகளையும், மூளையின் பதிவு நரம்புகளையும் பட்டா போட்டு எழுதிக்கொடுத்து விடவேண்டும்.