திங்கள், 7 நவம்பர், 2016

கடும் அழுத்தத்தில் அப்போலோ... அவசரமாக நிருபர்களை சந்தித்த பிரதாப் சி ரெட்டி

ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ் :  அப்பல்லோ மருத்துவமனை கடுமையானதோர்
பிரஷரில் இருப்பதாகத்தான் தெரிகிறது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் இம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே இந்த சிக்கல் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜெ வுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு என்று மட்டுமே சொல்லி வந்த அப்பல்லோ அக்டோபர் 3 ம் தேதி முதன் முறையாக முதல்வருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருப்பதாகச் சொல்லியது. அதற்கடுத்து வந்த மூன்று அறிக்கைகளில் ஜெ வுக்கு ஏற்பட்டிருக்கும் தீவிரமான உடல்நலப் பிரச்சனைகள் பற்றி மறைமுகமான வார்த்தைகளில் தெளிவாகவே அப்பல்லோ கூறிவிட்டது. அக்டோபர் 21 ம் தேதிக்குப் பிறகு எந்த அறிக்கையும் வரவில்லை. இதற்கு காரணம் உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்த அப்பல்லோ மருத்துவமனை விரும்புவதாகவும், ஆனால் அரசு தரப்பு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 21 ம் தேதியும், 20 ம் தேதியும் வந்த முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஜெ வின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப் பட்டிருந்தது. அதிலும் 21 ம் தேதி வந்த செய்தியில் ஜெ வுக்கு மயக்க மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டு விட்டதாகவும், அவரது இருதயத்தின் வால்வில் இருந்து நோய் தொற்று குணமாகி விட்டதாகவும், நுரையீரலில் நீர் சேர்வது நின்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே போல 4 ம் தேதி முதல் பக்கத்திலேயே ஜெ விரைவில் சிசியூ விலிருந்து வார்டுக்கு வந்து விடுவார் என்று கூறப்பட்டிருந்தது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் இந்த பிரச்சனைகள் எல்லாமே ஜெ வுக்கு இருப்பதும், அவர் சிசியூ வில் இருப்பதும் இந்த செய்திகளில் இருந்துதான் தெரியவந்தது.
இதனை அந்த நாளிதழ் எழுதுவதற்கான காரணம் அப்பல்லோ குழுமத்திலிருந்து குறிப்பிட்ட பத்திரிகையின் 'மூலவருக்கு' விடுக்கப்பட்ட 'எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற வேண்டுகோள்தான்' என்று அறியப்படுகிறது. இந்த செய்தி வந்தவுடன் பிரதான எதிர் கட்சியின் ஒரு பிரமுகர் அந்த பத்திரிகையின் 'ரம்மியமான' செய்தியாளரிடம் இப்படி கேட்டிருக்கிறார், 'இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?' என்று.
அதற்கு வந்த பதில், 'இது போன்ற செய்திகளையெல்லாம் நானே எழுத முடியாது சார், எங்களது மேலிடத்துக்கு அப்பல்லோ மேலிடத்திடம் இருந்து வந்த தகவல்தான் இது'!
இதே போல 4 ம் தேதி மதியம் திடீரென்று அப்பல்லோ சேர்மன் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பேசினார். அது ஒரு புத்தக வெளியீட்டு விழா. விழாவுக்கு 45 நிமிடங்கள் முன்புதான் அங்கு பிரதாப் ரெட்டி வரும் தகவல் மீடியாக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல ரெட்டி வந்தவுடனேயே அப்பல்லோவின் முக்கியமான நபர் மீடியாக்களிடம் 'நீங்கள் மைக் போடுங்கள், ரெட்டி பேசுவார்' என்று கூறியிருக்கிறார்.
அப்போதுதான் 'ஜெ குணமாகி விட்டார், எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார்' என்றெல்லாம் கூறினார் ரெட்டி.
உண்மையைத் தெரிவிக்க அரசு முட்டுக் கட்டைப் போடுவதால்தான் அந்தக் குறிப்பிட்ட நாளிதழ் மூலமும், பின்னர் தானே நேரடியாகவும் ரெட்டி பேசி விட்டதாகச் சொல்லப்படுகிறது. செப்டம்பர் 22 ம் தேதிக்குப் பிறகு அப்பல்லோவில் புற நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் 500 என்பதிலிருந்து 200 ஆகக் குறைந்து விட்டதாம். வெளி மாநிலத்திலிருந்து அறுவை சிகிச்சைக்கு வருபவர்களை விமான நிலையத்திலிருந்து முன்னணி இரண்டு மருத்துவமனைகள் இலவச ஆம்பலன்ஸ் மூலம் தங்கள் மருத்துவமனைகளுக்கு கடத்திக் கொண்டு போய் விடுகின்றனராம். பல நோயாளிகள் அப்பல்லோவில் தங்களது அறுவை சிகிச்சைகளைத் தள்ளிப் போட்டுள்ளனர். இதெல்லாம் அப்பல்லோவின் வசூலைக் கடுமையாகப் பாதித்துவிட்டதால், என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருக்கிறதாம் மருத்துவமனை நிர்வாகம்.
இதனிடையே தினமும் பத்திரிகைகளில் ஜெ குணமாகி விட்டார், கிச்சடி சாப்பிட்டார், டிவி பார்க்கிறார் என்றெல்லாம் செய்தி வருவதற்கு அந்த 'எழிலான' அதிகாரிதான் காரணமாம். அவரது அலம்பல் தாங்காமல் ஐஏஎஸ் அதிகாரிகளே ஓடுகிறார்களாம். காலை 9 மணிக்கெல்லாம் அப்பல்லோ வந்து விடும் 'எழிலானவர்' முக்கியமான பேப்பர்கள் மற்றும் டிவி க்களுக்கு சகட்டுமேனிக்கு 'நூறு சதம் உண்மையான தகவல்களை'க் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்  tamilonedindia.com

கருத்துகள் இல்லை: