வெள்ளி, 11 நவம்பர், 2016

ஜப்பானில் மோடி :கருப்பு பணம் பற்றி கழிவறையிலிருந்து சிந்தித்தபோது கணநேரத்தில் தோன்றியதுதான் இந்த மகா சிந்தனை

MODI 1
ட்டு போட்ட மக்களிடம் நோட்டு செல்லாது, கொஞ்சம் சிரமம்தான் என்று வாழ்த்து தெரிவித்த கையோடு ஜப்பானுக்கு விமானமேறிவிட்டார் திருவாளர் மோடி. அவருக்கோ, அவரது கூட்டத்திற்கோ செல்லாத நோட்டெல்லாம் பிரச்சினையில்லை. கார்டு வைத்துக் கொண்டோ இல்லை அதிகாரத்தை காட்டிக் கொண்டோ அடிப்படை மற்றும் ஆடம்பரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அரசு பயங்கரமாக பல்வேறு முறைகளில் யோசித்திருக்காதா, இதெல்லாம் பிரச்சினையா என்று பட்டையுடன் சின்னத்திரையில் தோன்றும் காவிக்கறை சமூக ஆர்வலர்கள் எக்காளம் செய்கிறார்கள்.

ஓவியம் – முகிலன்
மூன்று நாட்களுக்கு அரசு துறைகள் அந்த நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும் என்றார்கள். அப்படி எந்த அரசுத் துறையும் பெறவில்லை. அது அம்மாவின் டாஸ்மாக்கோ இல்லை ஆவின் பால் நிலையமோ, அரசு பேருந்துகளோ எங்கும் யாரும் அந்த நோட்டுக்களை தீண்டவில்லை. விமானமேறும் மேன்மக்களிடம் மட்டும் அந்த நோட்டுக்களை பயபக்தியுடன் வாங்கிக் கொண்டார்கள். இதுவே இப்படி என்றால் தனியார் கடைகள், மருத்துவமனைகள், இதர நிறுவனங்கள், பெட்ரோல் வங்கிகளைச் சொல்லவே வேண்டாம்.
KURUPPU PANAM MODIஒரு நாள் விடுமுறைக்கு பிறகு வங்கிகளில் கூட்டம் அலை பாய்கிறது. அப்போதும் குறைந்தது 4000 ரூபாய் மட்டும்தான் அதையும் 2000 ரூபாய் புதிய நோட்டாக அளிக்கிறார்கள். பழைய நூறு ரூபாயோ இல்லை புதிய 500 ரூபாயோ கிடையாது. ஏழை எளிய மக்கள் வெறும் 500 அல்லது 1500, 3,500 என்று கொண்டு சென்றால் பெரும் பிரச்சினை. குறைந்தது புதிய 2000 ரூபாய் பெறுமளவு நீங்கள் நான்கு 500 அல்லது இரண்டு 1000 ரூபாய் கொண்டு செல்லவேண்டும். பிறகு அது ரவுண்டாக ஆயிரங்களில் முடியவில்லை என்றால் மிச்சமிருக்கும் 500க்கு நோட்டுக்கள் கிடையாது.
வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் அதை அடிக்கடி பயன்படுத்தியிராத மக்கள் கணக்கில் இருக்கும் சொற்ப பணத்தோடு போடும் பணத்தையும் சேர்த்து 1500 ரூபாய் கேட்டால் கிடையாது. மக்களுக்கு எதுவும் புரியவில்லை.
சரி வாங்கிய 2000 ரூபாயும் இப்போது செல்லாத நோட்டு போலவே உள்ளது. அதை வைத்து 100 இல்லை 500 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் சில்லறை கிடையாது என்பதால் வெறுங்கையோடு திரும்ப வேண்டியிருக்கிறது. மருத்துவம், திருமணம், அன்றாடக் கூலி, கடன் என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் இந்த இரண்டு நாட்களில் மக்கள் படாதபாடு படுகிறார்கள். தயக்கத்துடன் சில கடைகளில் 500 ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா என்று கேட்கும் பெண்களுக்கு யார் கொடுக்க முடியும்?
பட்டினி கிடப்போர், மருந்து வாங்க முடியாதோர், திருமணச் செலவு செய்ய முடியாமல், மூகூர்த்தத்தையும் விட முடியாமல் மக்கள் படும் துன்பங்களெல்லாம் இந்த அயோக்கியர்களுக்கு தெரியுமா? தெரிந்தாலும் தேசத்திற்க்காக நீங்கள் கஷ்டப்படுங்கள் என்று நீரோ போல சிரிக்கிறார்கள். அனைத்து ஏ.டி.எம்களும் பணத்தை வெளயிடவில்லை. இயங்கும் எந்திரங்களும் ஒரிரு மணிகளுக்குள் முடங்கிப் போய்விடுகின்றன. ஒரு நாள் வாங்கியவர்களுக்கு மறுநாள் கிடையாது என வங்கிகள் கைவிரிக்கின்றன. கேட்டால் எங்களுக்கு வந்த உத்திரவு அப்படித்தான் என்கிறார்கள்.
சென்னை கோயம்பேட்டில் காய்கள் வாங்க ஆளில்லாமல் வியாபாரிகள், வந்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியாமல் வணிகர்கள் தவிக்கிறார்கள். விடுதிகள், கடைகள், உணவகங்களில் இருக்கும் சில்லறைகளுக்கேற்ப சொற்பமாகவே வியாபாரம் நடக்கின்றன. அன்றாடம் புழங்கும் பணத்தைக் கொண்டு வாழும் கோடிக்கணக்கான மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள்.
இந்தியாவில் கடன் அட்டைகள் (டெபிட் மற்றும் கிரெடிட்) தோராயமாக மொத்தம் எட்டு கோடி இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது. இதில் கிரமமாக பயன்படுத்துவோர் ஒரு கோடிக்கும் குறைவே. இவர்கள் மட்டும் கார்டுகளை தேய்த்து கொண்டு தமது வாழ்க்கையை பிரச்சினையின்றி நடத்துகிறார்கள். மீதிப்பேர் விதியை நொந்தவாறு அலைவதைத் தவிர வேறு வழியில்லை.
எந்த நாட்டிலிருந்தும் கருப்புப் பணத்தை கொண்டு வர இயலாத மோடி எல்லா நாட்டிற்கும் விடாமல் சுற்றுலா சென்று கொண்டே இருக்கிறார். அதில் இந்த முறை ஜப்பான். அதுவும் அவர் பிரதமரான பிறகு இரண்டாவது முறையாக சென்றிருக்கிறார். செல்லும் வழியில் தாய்லாந்து மன்னனுக்கு அஞ்சலி செலுத்தவும் அவர் மறக்கவில்லை. செல்ஃபிக்களுக்கான வாய்ப்பை மோடி ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.
மோடியின் ஆசை விளம்பரமென்றால் ஜப்பான் போன்ற நாடுகளின் திட்டம் முதலீடு! அதிவேக ரயில்களை இயக்கும் சக்தியை பெற்றிருக்கும் சீனாவும், ஜப்பானும் அதை மற்ற நாடுகளின் தலையில் கட்ட எப்போதும் போட்டி  போடுகின்றன. வெறும் கௌரவத்தின் சின்னமாக ஆகி வரும் இந்த அதிவேக ரயில் சீனாவில் கூட ஒரு வழித்தடத்தை தவிர மற்றவற்றில் இலாபகரமாக இல்லை. ஜப்பானிலோ இந்த ரயில்களை விரிவாக்கும் அளவு நாட்டின் எல்லையும், சந்தையும இல்லை. இந்நிலையில் இவர்கள் மூன்றாம் உலக நாடுகளை குறிவைக்கிறார்கள்.
ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியாதான் மிகப்பெரும் நாடு. வேறு எந்த ஆசிய நாட்டையும் விட தனது வளங்களையும், மக்களையும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கும் இது போன்ற பெரிய நாடு நம் கண்டத்தில் வேறு இல்லை. ஆகவே மோடிக்கு விருந்தும், ஃபோட்டோவும் கொடுத்துவிட்டு இருநாடுகளும் போட்டி போட்டதில், ஜப்பான் வெற்றி பெற்றிருக்கிறது.
MODI 2(1)இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்கும், இந்துத்துவத்தின் ‘தலை’ நகரமான அகமதாபாத்திற்கும் இடையே உள்ள 508 கி.மீட்டர் தூரத்தை  கடக்கும் இந்த அதிவேக ரயில் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பானையே தெரிவு செய்தார் மோடி. காரணத்தையும், பூரணத்தையும் நாம் அதானியிடம்தான் கேட்க வேண்டும். இந்த திட்டத்தின் மதிப்பு என்ன தெரியுமா? ஒரு இலட்சம் கோடி ரூபாய்! மதுரைக்கும், நெல்லைக்கும் மந்தைகள் போல அடைபட்டு முன்பதிவற்ற பெட்டிகளில் மக்கள் செல்லும் நாட்டில் குஜராத் பனியாக்கள் பயணிப்பதற்கு இத்தனை பெரிய செலவில் அதிவேக ரயில்! சமீபத்தில் கூட உயர்நீதிமன்றம் ஒரு ரயில் வண்டியில் ஏன் முன்பதிவற்ற பெட்டியை குறைத்தீர்கள், அவர்களெல்லாம் மனிதர்களில்லையா என்று கேட்டிருக்கிறது. அவர்களையெல்லாம் மனிதர்களாக மதித்தால் இங்கு மோடியோ, ஜெயாவோ ஆள முடியுமா? என்ன?
போகட்டும் மேற்கண்ட ஒரு இலட்சம் கோடி ரூபாய் திட்டத்திற்கு பிறகு இன்னும் ஐந்து அதிவேக ரயில் திட்டங்களை வைத்திருக்கும் இந்தியாவை கவனிக்க வேண்டிய தேவை ஜப்பானுக்கிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் வசம் சேரும் நிலையை விரும்பும் மோடி இந்த ஆர்டர்களை கண்டிப்பாக ஜப்பானுக்கே கொடுப்பார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாட்டின் திட்டங்களை சீனா பெற்றதற்கு போட்டியாக வியட்நாமையும், தைவானையும் பிடித்த ஜப்பானுக்கு இப்போது இந்தியாதான் மிகப்பெரிய ஆறுதல்.
தினமும் இரண்டு கோடியே முப்பது இலட்சம் மக்களை சுமந்து செல்லும் இந்திய ரயில்வேயின் தண்டவாளங்களுக்கு வயதாகி விட்டதாம். அவற்றில் பல ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டிருப்பதால், பல ரயில்கள் மெதுவாகவே பயணிக்கின்றனவாம். இதைப் பார்த்து மனம் நொந்த மோடி 8.5 இலட்சம் கோடி ரூபாய் செலவில் புதிய பாதைகள், புல்லட் ரயில்கள், நவீன ஸ்டேசன்கள் என பெரும் திட்டத்தை போட்டிருக்கிறாராம். இவற்றிற்காக 2020-ஆண்டிற்குள் முதலீடு செய்வாராம். சென்னை – குமரிக்கான இருவழிப்பாதையே ஆண்டுக்கு நூறு மீட்டர் போடுகிறார்கள். இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடத்திற்கும் என்ன நவீன மாற்றம் வரும்?
நம்மைப் போன்ற பாமரர்களின் பார்வையில் இவர்கள் ரயில்வேத் துறையை பார்க்கவில்லை. புல்லட் ரயில் போன்ற அதி உயர் செலவு பிடிக்கும் மாற்றத்தைத்தான் மோடி கம்பெனி குறிப்பிடுகிறது. இவ்வளவு பெரிய முதலீடு இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து பிடுங்கப்பட்டு அவை முறையே ஜப்பான் போன்ற ஏகாதிபாத்திய நாடுகள், அதானி, ரெட்டி பிரதர்ஸ் போன்ற தரகு முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்படும். பிறகு மாநகரங்களின் கார் – மாளிகை மனிதர்கள் புல்லட் வேகத்தில் பயணிப்பார்கள். நாமோ ஓட்டைப் பேருந்துக்காக காத்திருப்போம்.
சரி கிட்டத்தட்ட பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கு மோடியோ, இந்தியாவோ எங்கே போவார்கள் என்று கேட்டால் ஜப்பான் அதற்கு உதவி செய்கிறது. இந்தியாவின் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு சுமார் 81% கடனை அளிக்க ஜப்பான் முன்வந்திருக்கிறது. பிறகென்ன அந்தக் கடனுக்கான கந்து வட்டியை மாதந்தறும் இந்தியா அளித்து விடும். மேட்டுக்குடிகள் இங்கே மகிழ்ச்சியாக பயணிக்கலாம். புல்லட் ரயில் கொண்டு வந்த புல்லட் பாண்டி என்று மோடிக்கு கோவில் கட்டலாம்.
இந்த திட்டத்தில் யார் யார் எவ்வளவு ஆதாயம் பெறுவார்கள்? இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்த நத்தம் விஸ்வநாதனை, அதே நாட்டில் நிலக்கரி சுரங்க உரிமையாளராக மாற்றியவர் அதானி. எனில் ஜப்பான் இப்போது அதானியை என்னவாக மாற்றப்போகிறது? ஒரு வேளை தாய்லாந்தின் உரிமையாளராக மாற்றுமோ தெரியவில்லை.
முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக உழைக்கும் மோடியின் இந்த கருப்பு பண ஒழிப்பு நாடகத்தில் இதுதான் கிளைமேக்ஸ்!
ஜப்பானில் பேசிய மோடி, ஒன்றைத் திருத்தமாக தெரிவித்திருக்கிறார்: “ உங்கள் முதலீட்டிற்காக இந்தியாவை முழுமனதுடன் திறந்து வைத்திருக்கிறோம்”. இதுதான் கருப்பு பணம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கை.வினவு.காம்

கருத்துகள் இல்லை: