புதன், 9 நவம்பர், 2016

எப்போதும் என் மனதில் ஒரு மெல்லிய சோகம்! - ராஜாத்தி அம்மாள்

‘சோகமான பாட்டுதான் சுகமான ராகம்’ என்று சொல்வார்கள். மனசுக்குள் எத்தனையோ சந்தோஷங்கள் வந்தாலும், எல்லாவற்றையும் மீறிய ஒரு மெல்லிய சோகம் எப்போதும் என் மனதில் ஒரு புகைப்படலம் போல் இருந்துகொண்டேதான் இருக்கும். அதுபோன்ற மெல்லிய சோகத்திலிருப்பதில் எனக்கு ஒரு சுகமும்கூட இருக்கிறது. ஆனால், என்னை அப்படியொரு மெல்லிய சோகத்துக்காகக்கூட ஏங்கவிடக்கூடாது என்று காலம் நினைத்துவிட்டது போலும்... வேண்டும் வேண்டும் என்கிற அளவுக்கு என் வாழ்வில் சோகங்கள் வந்து போய்க்கொண்டேதான் இருக்கின்றன!


வீட்டில் நான் கடைக்குட்டியாக, நாலாவது பெண் என்பதால், செல்லம் அதிகம். என்றாலும் கூட, ‘இப்படி வாழ வேண்டும்... அப்படி வாழ வேண்டும்’ என்று எதிர்காலம் பற்றிப் பெரிதாக ஆசைகள் இருந்ததே கிடையாது! இப்போதும் ரசனையுடன் ஒரு வேலையை முடிக்கவேண்டும் என்று நினைப்பேனே தவிர, ஆடம்பரமாக இருக்க எனக்கு மனசு வராது!

என்னுடைய ஒரிஜினல் பெயர் தர்ம சம்வர்த்தினி. தாத்தா வைத்தது. ராஜாத்தி என்றும் ஒரு பெயர் வைத்தார்கள். கடைசியில் ராஜாத்திதான் நிலைத்தது! அந்தப் பெயரை, இவர்தான் எனக்கு வைத்தார் என்றுகூடச் சிலர் சொல்வதுண்டு. உண்மையில், இவருக்கு அந்தப் பெயர் பிடிக்காது! ‘ரேடியோவைத் திறந்தா, நாலு தரம் ‘ராஜாத்தி’னு சொல்றான்... புத்தகத்தைத் திறந்தா, நாலு தரமாவது உன் பேர் வருது... சரிதான். உன்னோட பேரு எல்லா இடத்துலயும் பரவணும்னு பணம் கொடுத்து ஏதும் எழுத வெச்சிருக்கியா, என்ன?’ என்று இவர் அவ்வப்போது கேலிதான் செய்துகொண்டிருப்பார்!

1966 செப்டம்பர் 23... அன்றுதான் எங்கள் திருமணம் நடந்தது. அப்போதிருந்த சூழ்நிலையில், சென்னையிலேயே ஒரு நண்பர் வீட்டில், அதிகம் வெளியே தெரியாமல் நடந்தது எங்கள் திருமணம்! அப்போது, நான் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். சிறுமியாக இருந்த போதிருந்தே, இவருக்கு முன்பே நாடகமேடை வழியாக எனக்கு அண்ணாவும் எம்.ஜி.ஆரும் அறிமுகமாகி இருந்தார்கள்.
இலக்கியம் பற்றி இவர் பேசப்பேச, குறுக்கீடு இல்லாமல் அதைக் கேட்டுக்கொண்டிருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம்... அதை இனிமையான இசையைக் கேட்பது போல கேட்டுக்கொண்டே இருப்பேன்! நட்பு கலந்த எங்களது இந்த உறவில் உதித்தவள் தான் கனிமொழி! `68-ல் மதுரநாயகம் மருத்துவமனையில் அவள் பிறந்தபோது, புழக்கத்தில் இல்லாத ஒரு புதுப் பெயரை வைக்க வேண்டும் என்று நானும் இவருமாகச் சேர்ந்து தேடித் தேடித்தான் ‘கனிமொழி’யை செலக்ட் செய்தோம்!

தளிர் மாதிரியிருந்த கனிமொழியை ஆஸ்பத்திரியில் என் படுக்கையருகே முதன்முறையாக நான் பார்த்தபோது, எனக்கு ஏனோ அழுகைதான் வந்தது. என் சூழ்நிலையில், அவள் ஆண் குழந்தையாகப் பிறந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து, நல்லபடியாக செட்டிலாக வேண்டுமே என்று ஒரு கவலை எழுந்தது. ஆனால், கனிமொழி வளர வளர... அவள் புத்திசாலித்தனத்தையும் படிப்பிலிருந்த துடிப்பையும் பார்த்துவிட்டு, எனக்குள் எழுந்த அர்த்தமில்லாத கவலைகள் எல்லாம் ஓடியே போய்விட்டன! இரண்டு வயது முடிவதற்குள்ளேயே, ‘நானும் ஸ்கூலுக்குப் போகணும்’ என்று வாசலுக்கு வந்து நின்று அழுதுகொண்டிருப்பாள்!

கையில் எந்தப் புத்தகம் கிடைத்தாலும் சரி... ‘நானும் படிக்கிறேன்’ என்று தூக்க முடியாமல் தூக்கி மடியில் வைத்துக்கொள்வாள். அவள் பாதி நேரம் தன் அப்பாவை, அவர் எழுதிக்கொண்டிருக்கும் காட்சியிலேயே பார்த்துப் பழகியதில், ‘நானும் எழுதுகிறேன்’ என்று ஏதாவது கிறுக்கிக்கொண்டே இருப்பாள். அவளது அந்த வயது கிறுக்கல்கள்தான் பின்னால் ஒரு நேரத்தில் கவிதையாக முகிழ்த்தபோது, ‘அவள் அப்பாவுக்கு இலக்கிய வாரிசு கிடைத்துவிட்டது’ என்று பூரிப்பாக இருந்தது! அப்பாவும் மகளுமாக நேரம், காலம் தெரியாமல் கவிதை பற்றிப் பேசிக்கொண்டே, நடுவிலிருக்கும் என்னைக் கூட மறந்து போய்விடுவார்கள்!

மதியம் இவர் இங்கே வரும் நேரங்களில், பெரும்பாலும் கனிமொழி பள்ளி சென்றுவிடுவாள் என்பதால், இரவில் சாப்பிடாமல் காத்திருந்து, அப்பாவுடன் சேர்ந்து சாப்பிடுவாள். மகளைக் கொஞ்சிய பின்தான், இவருடைய எழுத்துக்கள் அரங்கேற ஆரம்பிக்கும்.
இவர் எழுதும் விஷயங்களை ஒவ்வொரு பக்கமாக எழுதி முடித்தவுடனே படித்து விடுவேன்... கோபமோ, தாபமோ, உருக்கமோ இவரது ஒவ்வொரு வரியுமே உணர்ச்சி மேலாங்கி நிற்கும்... சிலவற்றை நான் படிக்கும்போதே கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்... குறிப்பாக, அண்ணா இறந்தபோது இவர் எழுதிய கவிதையை படித்துவிட்டு அடக்கமாட்டாமல் வெகு நேரம் அழுதுகொண்டிருந்தேன்.

அப்போதெல்லாம் இவருக்குத் தினமும் நான்-வெஜ் இருக்க வேண்டும். பெரும்பாலும் மதியம் சிக்கன், இரவு மீன்... ரொம்பப் பிடிக்கும். இப்போது இவர் சுத்தமாக நான்-வெஜ் அயிட்டங்களை விட்டுவிட்டார்! கேரட், முருங்கைக்காய், முள்ளங்கி, கீரை போன்றவை இப்போது அவரது ஃபேவரைட்! தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட்டில் நானேதான் போய் காய்கறி வாங்கிவந்து சமைப்பேன்!
சாப்பாட்டு விஷயத்தில் கனிமொழி யோடுதான் ரொம்பவும் போராட வேண்டி யிருக்கும்! அவளுக்கு நாலு வாய் சாப்பாடு ஊட்டிவிட்டேன் என்றால், அன்று எவரெஸ்ட்டையே தொட்டு வந்துவிட்டது போல ஒரு சந்தோஷம் கொப்பளிக்கும்! அந்தளவுக்கு அவள் வாயைத் திறக்கவே திறக்க மாட்டாள்! தீபாவளி என்றால், அந்த ஒரு மாதமும் கனிமொழிக்காக எங்கள் வீட்டில் வெடி விடுவோம். ஒரு வெடி போட்டதுமே, அந்தச் சத்தத்தில் பயந்து அவள் வாயைத் திறக்கும்போது, ஒரு வாய் சாதத்தை உள்ளே திணித்துவிடுவேன். மறுவாய் சாதத்துக்கு இன்னொரு வெடி!

நான் மார்க்கெட்டுக்கும் குழந்தையை ஸ்கூலில் விடப் போவதற்கும்கூட இடையில் பெரிய தடைகள் வந்தன. எமர்ஜென்ஸி பீரியட் அது... தலைவர்களையும் தொண்டர்களையும் காட்டுத்தனமாகக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நான் மார்க்கெட்டுக்குக் கிளம்பினால், பின்னாலேயே யாராவது நாலு பேர் தொடர்வார்கள். வீட்டுவேலை செய்யக்கூட யாரும் கிடைக்கவில்லை. கனிமொழி அப்போது சர்ச்பார்க்கில் படித்துக்கொண்டிருந்தாள். குழந்தையைக் கூட்டிப் போக டிரைவர்கூட வர மறுத்தார். ஆட்டோவிலும் பஸ்ஸிலும் சில நாட்கள் போய் விட்டு வருவேன். அப்படியும் பஸ் ஸ்டாப்பில் நாலு பேர் பின்தொடர்வார்கள். எதிர்பாராத நேரத்தில், முகத்தில் ‘ப்பூ’ என்று சிகரெட் புகையை ஊதி, மூச்சுத் திணற வைப்பார்கள். அப்புறம்தான் நாமே டிரைவிங் கற்றுக்கொண்டு தீருவது என்று, வெறும் நாலே நாளில் டிரைவிங் கற்றுக்கொண்டேன்.
அப்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்தோம். வீட்டுக்குள்ளேயே வந்து ‘சோதனை போடப் போகிறோம்’ என்று என்னை உடலெங்கும் சோதனை போட்டார்கள். ‘ஏன் எதற்காக இத்தனை சோதனைகள்?’ என்றுகூட எனக்கு அதிகமாகப் புரியவில்லை. சாதாரணமாகவே என் கண்முன்னால் ஒரு கஷ்டமான விஷயம் நடந்தால், அன்று என்னால் நிம்மதியாகத் தூங்க முடியாது. மனசு அதையே திரும்பத் திரும்ப நினைத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இப்போதுகூட பேப்பரில் வெட்டு, குத்து, தகராறு என்று செய்தி வந்தால், ‘அங்கே யாருக்கு என்ன ஆச்சோ..? ஏது ஆச்சோ’ என்று நெஞ்சு பதறும். அதிலும் செய்தி, குழந்தைகள் சம்பந்தப்பட்டது என்றால், சாப்பிடக்கூடத் தோன்றாமல் உட்கார்ந்துகொண்டிருப்பேன்.
‘கனிமொழி இனி பிழைப்பாளா’ என்று நடுக்கம் ஏற்படுத்தும் ஓர் அனுபவமும் அவளது மூன்றாவது வயதில் எனக்குக் கிடைத்தது. ஜுரத்தில்தான் ஆரம்பித்தது அது... ஆஸ்பத்திரியிலேயே வைத்திருந்து பார்த்தும் நாலு நாட்களாக நிற்காமல் ஜுரம்... உடம்பெல்லாம் சிவந்து, அம்மை வேறு போட ஆரம்பித்துவிட்டதால், குழந்தையை மருத்துவமனை யிலிருந்து வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டோம். என்னதான் ஆனதோ குழந்தைக்கு... அவளது அழகான முடி, அப்படியே கூடுகூடாகக் கழன்று தலையே மொட்டையாக... பாம்புக்குத் தோல் உரிவது போல உடம்புத் தோல் உரிந்துகொண்டே இருந்தது. மெல்லிய, சற்றே சிவந்த அவள் உடம்பு, கரேர் என்றானது. அப்போது கறுப்பான அந்த கலர் இன்னும் கூட பழைய நிறத்துக்கு மாறவில்லை!

நானாகப் போய் யாரிடமும் பேசிப் பழக்கமில்லை. என் சுபாவம் அப்படி! அதை வைத்துத் ‘தலைக்கனம் பிடித்தவள்’ என்றுகூடச் சிலர் நினைத்திருக்கக்கூடும். யாருக்காவது உதவ முடிந்தால் சந்தோஷப்படும் ஒரு சாதாரண சென்சிட்டிவ் பிறவி நான்! பலன் எதிர்பாராமல் உதவிகள் செய்தும் இருக்கிறேன் என்றாலும், அதையெல்லாம் வெளியே சொல்வது நாகரிக மல்ல... எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடித்த விஷயம். தெருவில் நடந்து போகும் ஆதரவற்ற குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றிருக்கிறது. பெரும்பாலும் என் சிந்தனை யெல்லாம் அதைப் பற்றித்தான்!  vikatan.com

கருத்துகள் இல்லை: