மோடி அரசுக்கு கிடைக்கும் ஏகாதிபத்திய நாடுகளது வரவேற்பின் பின்னே இத்தகைய மல்டி பில்லியன் டாலர் வியாபாரமே பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. இது தெரியாத தேசபக்த குஞ்சுகள், பிரான்சு நாடு போட்ட சாட்டிலைட் பிச்சையை வைத்து வல்லரசு என்று விண் நாண சிரிக்கிறார்கள்
டந்த ஜூன் மாதம் 30-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஐந்து செயற்கைக்கோள்கள் இந்தியாவின் PSLV C-23 விண்கலத்தால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் செயற்கைக்கோள்கள். இதற்காக மோடி, சிறீ ஹரிகோட்டாவுக்கு வந்ததும், செயற்கைக்கோள்கள் விண்ணில் சென்றதை கண்டுகளித்ததும் ஊடகங்களின் முக்கிய செய்திகளில் இடம்பிடித்தன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்திய செயற்கைக்கோள்கள் பிரெஞ்சு விண்கலன்களில் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி இன்று இந்தியா அயல்நாடுகளின் செயற்கைக்கோள்களை அனுப்பும் நிலைக்கு முன்னேறியது ஊடகங்களில் மெச்சப்பட்டது. மோடியும் இந்த மாற்றத்தை தனது கொள்கைகளான வளர்ச்சி, வேகம், திறனுடன் ஒத்துப் போயிருப்பதாக பெருமிதப்பட்டுக் கொண்டார்.