திங்கள், 7 நவம்பர், 2016

ஆறுமுகத்தின் பேச்சை கேட்டு தீப்பொறி பட்டம் கொடுத்த அண்ணா...: கலைஞர் இரங்கல்


சென்னை: திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆறுமுகத்தின் பேச்சைக் கேட்டு தீப்பொறி என்ற அடைமொழியை அண்ணா வழங்கினார் என்றும் மிசா கைதியாகவும் சிறைவாசகம் அனுபவித்தவர் தீப்பொறி ஆறுமுகம் எனவும் கருணாநிதி கூறினார்.
திமுகவின் நட்சத்திர பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம், 78 நேற்றிரவு உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:< தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், தி.மு. கழக முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம் அவர்கள் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

தீப்பொறி ஆறுமுகம் தனது பதினைந்தாவது வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி, பெரியாரால் அப்போதே பாராட்டப் பட்டவர். அவருடைய பேச்சைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் அவருக்கு தீப்பொறி என்ற அடைமொழியைக் குறிப்பிட்டு, பின்னர் காலப் போக்கில் தீப்பொறி என்றாலே அவரைக் குறிப்பிடும் அளவிற்கு பெயர் பெற்று விட்டார்.
மிசா கைதியாகவும் தீப்பொறி ஆறுமுகம் சிறைவாசம் அனுபவித்தவர். தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சினைக் கேட்பதற்காகவே தனி கூட்டம் கூடுவதுண்டு. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் செல்கிறார். தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவு குறித்து பெரிதும் வருந்துவதோடு, அவருடைய குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
தீப்பொறி ஆறுமுகத்திற்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம், இளவயதிலேயே தி.மு.க.வில் இணைந்து, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியவர். குறிப்பாக அ.தி.மு.க.வையும், அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை கடுமையான சொற்களால் பேசி புகழ்பெற்றவர் தீப்பொறி ஆறுமுகம். தி.மு.க தலைவருடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, 2001ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியளித்தார். சில ஆண்டுகாலம் அங்கிருந்த தீப்பொறி ஆறுமுகம், கடந்த 2010ல் மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: