கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வரை சுவாசிக்க அவரது தொண்டையில் ஆபரேஷன் செய்து சுவாசக்குழாய்க்குள் செயற்கை சுவாசக்குழாய் பொருத்தி ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ட்ரஸ்கியாஸ்டமி என்னும் முறையின் மூலம் அளிக்கப்படும் இந்த சிகிச்சை ஒரு உயிர்காக்கும் சிகிச்சையாகும். மாதக்கணக்காக இந்த சிகிச்சையே தொடர்ந்து வந்தநிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவரை செயற்கை சுவாசக்கருவியின் உதவியின்றி இயற்கையாக சுவாசிக்க வைக்கும் முயற்சிகளை மருத்துவர்கள் முன்னெடுத்தார்கள்.
செயற்கை சுவாசக்கருவி இல்லாமல் அவரால் இயற்கையாக சுவாசிக்க முடிகிறதா என்பதை பரிசோதித்து அப்படி முடிந்தால் அவரை வி.ஐ.பி. அறைக்கு மாற்றலாம் என்பது ரிச்சர்ட் பேலின் அட்வைஸ். ஆனால், ட்ர்ஸ்கியாஸ்டமி குழாய் இல்லாமல் அவரால் சுவாசிக்க முடியவில்லை.
இதனால் அவரை தனி அறைக்கோ, வி.ஐ.பி. அறைக்கோ மாற்றும் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டு தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்திருக்க முடிவு செய்துள்ளார்கள் மருத்துவர்கள். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் லண்டனுக்குத் திரும்பிச் சென்று விட்டநிலையில், அவருடைய ஆலோசனைகளை மெயில், வீடியோ கான்பிரன்சிங் மூலம் பெற்று சிகிச்சை தொடர்ந்து வரும் நிலையில் அடுத்தக்கட்ட சிகிச்சை என்பது அவரை இயற்கையாக சுவாசிக்க வைப்பது மட்டுமே. இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது ட்ரஸ்கியாஸ்டமி குழாயை அகற்ற முடியுமா என்பதுதான் முதல்வரின் உடல்நிலை தொடர்பாக எழுந்துள்ள கேள்வி!
இந்நிலையில் முதல்வர் இயற்கையாக சுவாசிப்பதாக , தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறினார். “முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினேன். முதலமைச்சர் ஜெயலலிதா மிக விரைவாக பூரண குணமடைந்து வருகிறார். விரைவில் வீடு திரும்பி அரசு மற்றும் நிர்வாகப் பணியை மிக வேகமாக தொடருவார் என்ற நல்ல செய்தியை சொன்னார்கள். நாட்டு மக்களுடைய வேண்டுதல், பிரார்த்தனைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
ஜெயலலிதா நெருக்கடியான, கடினமான நிலையில் இருந்து மீண்டு வருவார். மிக வலிமையாக மக்களுடைய ஆதரவோடு இன்னும் பல ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக நலத்திட்டங்களை தந்து அரசு நிர்வாகத்தை நடத்துவார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் அவர் பரிபூரண குணமடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறினார். minnambalam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக