புதன், 14 ஜூலை, 2010

DynCorp,பயங்கரவாத புலிகளின் உரை அமெரிக்க விமானப்படை தொலைக்காட்சியில்

அமெரிக்க விமானப்படைக்கான தொழில் நுட்ப சேவையை தற்போது வழங்கிக்கொண்டிருக்கின்ற டயன்கோப் (DynCorp) என்ற அமெரிக்க கம்பனியில் கடந்த ஆண்டுவரை 95 சதவீதமான இலங்கையர்கள் தொழில் புரிந்தார்கள். ஆனால் இந்த வருடம் 85 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இதில் தொழில் புரிகின்றார்கள்.
அத்துடன் இலங்கையில் இருந்து தொழிலாளர்களை புதிதாக வேலைக்கமர்த்துவதை அந்த கம்பனி தற்போது நிறுத்தியுள்ளது
இந்த அமெரிக்க கம்பனியானது அமெரிக்க விமானப் படையினர் குடிகொண்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளான ஓமான், வக்ரன், கட்டார், குவைத், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் தனது கிளைகளை வைத்திருந்தாலும் ஓமான், கட்டார், வக்ரன் போன்ற நாடுகளில் மட்டும்தான் இலங்கையர்களை வேலைக்கமர்த்தியுள்ளது. இதன் அடிப்படையில் கட்டாரில் தொழில் புரிந்த 550 மொத்த தொழிலாளர்களில் 525 பேர் இலங்கையர்கள் அவர்களில் 47 பேர் மாத்திரமே இலங்கைத் தமிழர்கள்இவர்கள் தொழில் புரிவது அமெரிக்க விமானப்படை முகாமிற்குள்ளே என்றாலும் இதற்கு புறம்பாக நகருக்குள் ஒரு இடத்தில் அமெரிக்கர்களைத் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் ஒரு இடத்தில் பெரிய முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த முகாமில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தனித்தனியாக தொலைக்காட்சி தொடக்கம் செய்திப்பத்திரிகை வரையும் மேலும் விளையாட்டு பொழுது போக்குக்கான வசதிகள் என்பன.
அத்துடன் சகல விளம்பரங்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடப்படும். ஆனால் இந்த சிங்களவர்கள் தமிழில் இருக்கின்ற விளம்பரத்தை ஒட்டிய உடன் கிழித்து வீசி விடுவார்கள். அத்துடன் தமிழர்களுக்கான தொலைக்காட்சியில் (சாப்பாட்டு மண்டபத்தில்) தமிழ் ஒளிபரப்பு செய்தால் உடனே அதை ஆங்கில அலைவரிசைக்கு மாற்றுவார்கள். இந்த விடயங்களை அவ்வப்போது மேலதிகாரியான அமெரிக்கர்களிடம் தமிழர்கள் முறையிடுவார்கள்.
இந்த காலங்களில் ஒருநாள் 2004ம் ஆண்டு என நினைக்கின்றேன் அப்போது சாப்பாட்டு மண்டபத்தில் இருந்த தொலைக்காட்சியில் மாவீரர் தின உரை திடீரென ஒளிபரப்பு செய்யப்பட்டது அந்த நேரத்தில் இருந்த சிங்களவர்கள் அதிர்ந்து போய் ஆத்திரம் பொறுக்க முடியாமல் தொலைக்காட்சியை பலாத்காரமாக ஓடவிடாமல் தடைசெய்தார்கள். அந்த கணமே சிங்களவர்களினால் அமெரிக்கா வரை முறைப்பாடு போனது. “அமெரிக்கா தடை செய்த பயங்கரவாத புலிகளின் உரை அமெரிக்க விமானப்படை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாமா?” அதுதான் முறைப்பாடு. உடனே தற்காலிகமாக தமிழ் ஒளிபரப்பு செய்வது தடைசெய்யப்பட்டது.
இத்தனைக்கும் முகாம் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழர் என்பதுவும், அவரே இந்த மாவீரர் உரையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு காரணமாக இருந்தவர் என்பதுவும் சகல சிங்களவர்களுக்கும் தெரியும்.
சிங்களவர்களின் முறைப்பாட்டை அமெரிக்கா பெரிதாக எடுக்கவில்லைலே என மனம் உடைந்த சிங்களவர்கள் கட்டாரில் இருக்கின்ற இலங்கைத் தூதரகம் ஊடாக மாற்றுத்திட்டம் ஒன்றை தீட்டினார்கள். அதாவது அமெரிக்க விமானப்படையின் தொழிலாளர்களின் தங்குமிட முகாமின் பொறுப்பதிகாரியாக இருப்பவர் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என்பதுதான் அந்த முறைப்பாடு.
மேற்படி இந்த முறைப்பாடு இலங்கைத் தூதரகம் ஊடாக அமெரிக்க அரசின் பாதுகாப்பு பிரிவுக்கு போனது. அதன்போதும் பெரிதாக அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக நேரடியாக அமெரிக்க அரசிக்கும் கட்டாரின் பாதுகாப்பு அமைச்சிக்கும் விடயம் தெரிவிக்கப்பட்டதால். வேறு வழியில்லாமல் அந்த தமிழர் கடந்த வருடம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.
இதன் பிற்பாடு நிலமைகளை உற்று நோக்கிய அமெரிக்க அரசு இலங்கையில் இருந்து தொழிலாளர்களை எடுக்கவேண்டாமென பாதுகாப்பு அமைச்சினூடாக குறித்த கம்பனிக்கு (DynCorp)உத்தரவு பிறப்பித்தது. இதனால் அனைத்து சிங்களவர்களும் ஆடிப்போயுள்ளார்கள். மேலும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதையும் ஒரு காரணமாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளதாக குறித்த கம்பனியில் தொழில் புரியும் அமெரிக்கர் ஒருவர் தெரிவித்தார்.
மொத்தமாக 1200 சிங்களவர்களுக்கு மேல் தொழில் புரிந்த இந்த கம்பனியில் தற்போது 800 பேராக குறைந்துள்ளார்கள் எனவும் அத்துடன் வருகின்ற வருடங்களில் முற்றாகவே சிங்களவர்கள் இந்த கம்பனியில் இருந்து வேலையை இழக்க வேண்டி வரும் எனவம் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சில இலங்கையர்கள் 15 வருடங்களுக்கும் மேலாக இந்த அமெரிக்க விமானப்படையின் கீழான கம்பனியில் தொழில் புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் அனைவரும் இந்த கம்பனியில் இருந்து தொழிலை இழந்தால் இலங்கைக்கு அது ஒரு பாரிய நட்டமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: