புதன், 14 ஜூலை, 2010

பா.ம.க.,வில் புகைச்சல் ஒரே குடும்பத்திற்கு மூன்று பதவிகள்

ஒரே குடும்பத்திற்கு மூன்று பதவிகள்: பா.ம.க.,வில் புகைச்சல் ஆரம்பம்!  ""புது நிர்வாகிகள் நியமனத்தால், அதிருப்தி அலை உருவாகியிருக்குங்க...'' என பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

""எந்தக் கட்சியில ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.

""பா.ம.க.,வுல சமீபத்துல புது நிர்வாகிகளை நியமிச்சாங்க... அதுல, எம்.எல்.ஏ., வேல்முருகனுக்கு இணைப் பொதுச்செயலர் பதவி கொடுத்தாங்க... கட்சியில காடுவெட்டி குருவுக்கு எதிரா அரசியல் செஞ்சிட்டிருக்கும் வேல்முருகனுக்கு முக்கிய பதவி கொடுத்திருக்கறது, குருவுக்கு வச்சிருக்கும், "செக்'ன்னு சொல்றாங்க...

""அதுமாதிரி, ஏ.கே.மூர்த்திக்கு துணைப் பொதுச்செயலர் பதவியும், அவரது உறவினருக்கு மாவட்டச் செயலர் பதவியும் கொடுத்திருக்காங்க... அவரது இன்னொரு உறவினர் கவுன்சிலராவும், மாநகராட்சியில குழு தலைவராவும் இருக்காருங்க... இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கே நிறைய பதவிகள் கொடுத்தது, கட்சியில அதிருப்தி அலையை உருவாக்கி இருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.
""கஞ்சா விற்பனைக்கு சீனியர் சிட்டிசனை பயன்படுத்துதாங்க வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
""இந்த அக்கிரமம் எங்க நடக்குதுங்க...'' என, கேள்வி எழுப்பினார் அந்தோணிசாமி.

""சென்னை பூக்கடை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பாரிமுனை, மண்ணடி, துறைமுகம் பகுதிகள்ல கூலித் தொழிலாளர்கள் அதிகமா இருக்காவ... அங்குள்ள டாஸ்மாக் கடைகள்ல போலி சரக்கு அதிகமாகிட்டதால, "குடி'மக்கள் அதிக போதைக்காக கஞ்சா புகைக்க ஆரம்பிச்சிருக்காவ... இதனால, அந்த பகுதிகள்ல கஞ்சா விற்பனை அதிகமாயிட்டு...

""அரசியல்வாதிகள், லோக்கல் போலீஸ் ஆதரவோட சிலர் கஞ்சா தொழிலை மொத்தமா குத்தகை எடுத்து நடத்துதாங்க... ரயில் மூலம் அம்பது கிலோ, நூறு கிலோ கஞ்சாவை தினமும் கொண்டு வந்து, காகிதத்துல சின்ன பொட்டலம் போட்டு விற்பனை செய்யுதாங்க... சில்லரை விற்பனையில் ஈடுபடுறவங்க மேல சந்தேகம் வராம இருக்க, வயசான பாட்டிகளையும், மாற்றுத் திறனாளிகளையும் பயன்படுத்துதாங்க...'' என்றார் அண்ணாச்சி.
""அநியாயமா இருக்கேங்க...'' என்றார் அந்தோணிசாமி.
""ராஜாஜி சாலையில் கஸ்டம்ஸ் ஆபீஸ் பின்னால 24 மணி நேரமும் கஞ்சா விற்பனை நடந்தும் அதை போலீஸ் கண்டுக்கறதில்லை வே... இதுபோல, தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை, ராயபுரம் பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அதிகமா நடக்கு...'' என்றார் அண்ணாச்சி.

""வாரிசுகள் வருத்தத்தில் இருக்காங்க பா...'' என அடுத்த விவகாரத்தில் நுழைந்தார் அன்வர்பாய்.
""என்ன காரணம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
""கருணை அடிப்படையில், அரசு பணிக்காக காத்திருக்கும் வாரிசுகளின் புலம்பல் பா... வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி, மறைந்த 31 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க, பயனாளிகளை தேர்ந்தெடுத்திருக்காங்க... அவங்களுக்கான சரிபார்ப்பு பணியையும் முடிச்சுட்டாங்க...
""மூணு மாசத்திற்கு மேலாகியும், இன்னும் பணி நியமனம் வந்தபாடில்லை... பயனாளிகள் போய் கேட்டா, வாரியத் தலைவர் கையில தான் எல்லாமே இருக்குன்னு, தட்டிக் கழிக்கறாங்க... துணை முதல்வர் கருணைப் பார்வை பட்டால் தான், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்கும்ன்னு பாதிக்கப்பட்டவங்க காத்திருக்காங்க பா...'' எனச் சொல்லி முடித்தார் அன்வர்பாய்; பெரியவர்கள் புறப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: