திங்கள், 19 அக்டோபர், 2026

களத்தில் இறங்கிய பிரான்ஸ் மக்கள்! நாட்டில் அசாதாரண சூழல்

 nakkheeran.in  : பிரான்ஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ளிட்ட எரிபொருள்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன. 
இதனால், பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க அமைப்பினர் வீதிகளில் இறங்கித் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். 


அதன்படி, தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
அதோடு, அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். 
இந்தப் போராட்டத்தின் காரணமாகப் பிரான்ஸ் நாட்டின் பொதுப் போக்குவரத்து, கல்வி நிலையங்கள் மற்றும் அத்தியாவசியச் சேவைகள் பல இடங்களில் ஸ்தம்பித்துள்ளன. அதே சமயம் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரான்ஸ் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, லிமோகஸ் நகரில் அரங்கேறிய வன்முறைகளால் பல கட்டடங்கள் சூறையாடப்பட்டன. 

இதில், 143 ஆண்டுகள் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சி கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டது. மற்றொருபுறம், இந்த மோதல்களில் காவல்துறையினர் உட்படப் பலரும் காயமடைந்துள்ளனர். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் இமானுவல் மெக்ரான், சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: