வியாழன், 15 ஜூலை, 2010

தமிழகத்தில் திருமண பதிவு செய்யாத 7000 இலங்கைத் தமிழர்கள்

தமிழகத்தில் உள்ள 115 இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களில் சுமார் 7 ஆயிரம் பேர் தங்களது திருமணத்தை பதிவு செய்யாமல் இருக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை பெற முடியாத சூழல் ஏற்படும் என, ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் மாநில அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் ச.நடேசலிங்கம் வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போரினால், தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 115 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை அரசு பராமரித்து வருகிறது.


இவர்களில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் பெறுவது அவர்களுக்கும், பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் மிகவும் பாதுகாப்பானதாகும். எனவே, திருமணப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் ஈடுபட்டு வருகிறது.
இந்தக் கழகத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள முகாம்களில் வசித்து வருபவர்களில் தற்போது திருமணம் செய்துகொண்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கரூர் மாவட்டம், இரும்பூதிப்பட்டியிலுள்ள அகதிகள் முகாமில் 172 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 62 தம்பதிகளும், ராயனூர் முகாமில் வசித்து வரும் 494 குடும்பங்களில் 45 தம்பதிகளும் திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.
எனவே, அவர்களது திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் முகாம் ராயனூரில் 14ந் தேதி நடைபெற்றது. இதில், ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரகாந்தி, மாநில அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் ச.நடேசலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
இது குறித்து நடேசலிங்கம் கூறுகையில்,

“தமிழகத்திலுள்ள 115 முகாம்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 7 ஆயிரம் பேர் திருமணம் செய்துகொண்டு தங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. எனவே, அந்தந்த மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக அவர்களின் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
இந்தப் பதிவு இருந்தால்தான் பிறக்கும் குழந்தைக்கு இலங்கை குடியுரிமை பெற முடியும். எனவே, இந்தப் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, திருமணங்களை பதிவு செய்து வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: