வெள்ளி, 16 ஜூலை, 2010

இலங்கை தொடர்பான தீர்ப்பு, சொந்த மண்ணில் போரில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் எச்சரிக்கையாக

இலங்கை தொடர்பான தீர்ப்பு, சொந்த மண்ணில் போரில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் எச்சரிக்கையாக வேண்டும் - பாக். பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் தீர்ப்பானது சொந்த நாட்டில் யுத்தத்தில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும் என பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகையான 'டோண்' தனது ஆசிரியர்  தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியான, இலங்கையின் 'போர்க்குற்றங்கள்' எனும் தலைப்பில் வெளியான இத்தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு விசுவாசமான அமைச்சர் ஒருவர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த வருடம் முடிவுற்ற போரின்போது இலங்கை இராணுவத்தினரால் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரினர்.
யுத்தம் முடிவுற்று, பொதுமக்களுக்கு எதிராக இராணுவத்தின் கொடுமைகள் குறித்த அறிக்கைகள் வெளியாகி ஒருவருடத்தின் பின்னரே ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் மூவர் கொண்ட குழுவொன்றை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த யுத்தம் இராணுவத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தமிழீழப் பிரச்சினையை அரசியல் ரீதியில்; மாத்திரம் தீர்க்க முடியாதென நம்பிய ஜனாதிபதியின் முழுமையான ஆதரவு அந்த யுத்தத்திற்கு இருந்தது.
அந்த யுத்தம் 27 வருடங்களாக நீடித்ததுடன் இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி சில மாதங்களில் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
மோதல்களின் இறுதிக்கட்டத்தின் போதான, சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான மீறல்கள் குறித்த பொறுப்புடைமை பொறிமுறை தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குமாறு மேற்படி குழு கோரப்பட்டுள்ளது.
ஆயுதப்போர்களின்  மாறிவரும் தன்மையானது  சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை வரையறுத்த ஜெனீவா ஒப்பந்தத்தின் விணைத்திறனை இல்லாமலாக்குவதாக உள்ளது. சீருடையிலுள்ள நபர்கள் இணக்கமில்லாதோருடனும் கிளர்ச்சியாளர்களுடனும் சண்டையிடும்போதுகூட இந்த ஒப்பந்தங்களின் கொள்கைகளை பின்பற்றவேண்டும் என்பது முக்கியமானதாகும்.
இலங்கை தொடர்பான தீர்ப்பானது சொந்த நாட்டில் யுத்தத்தில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும். பொதுமக்களிடமும் காயமடைந்த எதிரிச் சிப்பாய்கள் மீதும் மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும் எனும் கொள்கை புனிதமானதும் மதிக்கப்பட வேண்டியதுமாகும்."
www.tamil.daillymirror.lk

கருத்துகள் இல்லை: