Ketharanathan Saravanan : யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வளர்கிறதா? இல்லை, சுற்றுலா என்ற பெயரில் ஊரை ஏமாற்றுகிறார்களா?
யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வளர வேண்டும் தான். ஆனால் சுற்றுலா என்றால் என்ன என்று தெரியாத ஒரு கூட்டம், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் செய்யும் கோமாளித்தனங்களை பார்க்கும் போது வாந்தி வருகிறது.
வெளிநாட்டிலிருந்து ஒருவன் யாழ்ப்பாணத்துக்கு வருகிறான் என்றால், அவனுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? இதை யோசித்தீர்களா?
1. ஒரு மனிதன் நிம்மதியாக நடக்க முடியாத ஊர்:
யாழ்ப்பாணத்தில் ஒரு வெளிநாட்டு பயணி இரவு 7 மணிக்கு மேல் நல்லூரில் இருந்து மணிக்கூட்டு வீதி வரை நடந்து வர முடியுமா? முடியாது.
காரணம் தெரு நாய்கள். ஒவ்வொரு சந்தியிலும் 10, 15 நாய்கள். கூட்டம் கூட்டமாக துரத்தும். இதற்கு ஒரு கட்டுப்பாடு உண்டா? ஒரு தீர்வு உண்டா? இல்லை.
நாய் பிரச்சனையை கட்டுப்படுத்த துப்பில்லாதவர்கள் எல்லாம் சுற்றுலா பற்றி பேசுகிறார்கள்.
2. அடிப்படை வசதி என்றால் பூஜ்ஜியம்:
ஒரு சுற்றுலா நகரத்துக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி சுத்தம்.
பிளாஸ்டிக்: யாழ்ப்பாணம் முழுக்க பிளாஸ்டிக் தான். கடற்கரை முழுக்க பொலித்தீன், போத்தல். நயினாதீவு போகும் படகில் இருந்து பாருங்கள், கடலே குப்பைத் தொட்டி மாதிரி இருக்கும். பிளாஸ்டிக் பாவனையை குறைக்க ஒரு திட்டம் இருக்கிறதா? இல்லை.
பொது மலசலகூடம்: இதை கேட்கவே அசிங்கமாக இருக்கிறது. யாழ் பஸ் ஸ்டாண்ட், யாழ் மார்க்கெட், நல்லூர் கோவில் வாசல் - எங்காவது ஒரு வெளிநாட்டவன் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு சுத்தமான பொது கழிவறை இருக்கிறதா? காசு கொடுத்தாலும் போக முடியாத நாற்றம். ஒரு பெண் சுற்றுலா பயணி என்ன செய்வாள்?
குடிநீர்: இந்த வெயிலில் ஒரு பொது இடத்தில் ஒரு குடிநீர் குழாய் இருக்கிறதா? யாழ் நகரில் ஒரு இடத்தில் கூட இலவசமாக, சுத்தமாக தண்ணீர் குடிக்க முடியுமா? இல்லை. பின் எப்படி ஒருவன் நடந்து சுற்றி பார்ப்பான்?
தகவல் பலகை: யாழ் கோட்டைக்கு போனால் அதன் வரலாறு என்ன என்று அதன் சுற்றுப்புறங்களில் பாருங்கள் எவ்வளவு குப்பைகள்
இது எதையும் செய்யாமல், நாம் செய்வது என்ன?
3. ஹெலிகொப்டர் சுற்றுலாவா? இது கேலிக்கூத்து இல்லையா?
யாழ்ப்பாணத்து மக்களையே ஹெலிகொப்டரில் ஏற்றி, யாழ்ப்பாணத்தை சுற்றி காட்டுவது எப்படி சுற்றுலா வளர்ச்சியாகும்?
இதனால் யாருக்கு என்ன லாபம்? வெளியில் இருந்து ஒரு புது காசு யாழ்ப்பாணத்துக்கு வருகிறதா? இல்லை.
யாழ்ப்பாணத்தானின் காசை பிடுங்கி, ஹெலிகொப்டர் கம்பெனிக்காரனுக்கு கொடுப்பது தான் உங்கள் சுற்றுலா கொள்கையா? இதை நீங்கள் சாதனை என்று போட்டோ போடுகிறீர்கள். வெட்கமாக இல்லையா?
4. உணவுத் திருவிழா என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளை:
இது தான் உச்சக்கட்டம். யாழ்ப்பாணத்தில் இருக்கும் அதே கடைக்காரனை கூப்பிட்டு, அதே புட்டு, அதே ஒடியல் கூழ், அதே நண்டு கறியை மூன்று மடங்கு விலை வைத்து விற்பது தான் Food Festival ஆ?
இதற்கு பெயர் சுற்றுலாவா? இல்லை, யாழ்ப்பாணத்து மக்களின் பணத்தை யாழ்ப்பாணத்திலேயே சுற்ற வைத்து, அதில் ஒரு கமிஷனை எடுக்கும் ஈவென்ட் பிசினஸ்.
உங்களிடம் ஒரு கேள்வி. இந்த உணவுத் திருவிழா பற்றி ஜேர்மனியில் இருக்கும் ஒரு சுற்றுலா பயணிக்கு தெரியுமா? பிரான்சில் இருக்கும் ஒருவனுக்கு தெரியுமா? TripAdvisor, Google Travel, Booking.com இல் எங்காவது இதற்கு ஒரு விளம்பரம் இருக்கிறதா? இல்லை.
வெளிநாட்டவனுக்கு தெரியாத ஒன்றை வைத்து, உள்ளூர் மக்களிடம் காசை கறந்து விட்டு, அதை சர்வதேச சுற்றுலா வளர்ச்சி என்று சொல்வதை விட பெரிய ஏமாற்று வேலை எதுவும் இல்லை.
உண்மையான சுற்றுலா என்றால் என்ன?
சுற்றுலா என்பது வெளியில் இருந்து புதிய பணத்தை இந்த மண்ணுக்கு கொண்டு வருவது. வெளிநாட்டவன் இங்கு வந்து 3 நாள் தங்க வேண்டும். ஹோட்டலில் தங்க வேண்டும். ஆட்டோவில் போக வேண்டும். கடையில் சாமான் வாங்க வேண்டும்.
அதற்கு முதலில் ஊரை ஒழுங்குபடுத்துங்கள். நாயை பிடியுங்கள். குப்பையை அள்ளுங்கள். ஒரு கழிவறையை கட்டுங்கள். குடிநீர் குழாய் வையுங்கள். பஸ் ஸ்டாண்டை சுத்தமாக்குங்கள்.
இதை செய்யாமல் ஹெலிகொப்டர், Food Festival என்று காசை வீணடிப்பது சுற்றுலா வளர்ச்சி இல்லை, அது சுற்றுலாவின் பெயரால் நடக்கும் மோசடி.
யாழ்ப்பாணத்தை முதலில் வாழ தகுதியான ஊராக மாற்றுங்கள். பிறகு சுற்றுலா தானாக தேடி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக