புதன், 26 ஜூன், 2019

தமிழக முதல்வராகும் அமித் ஷா.. தமிழக அதிகாரிகள் அமித் சாவின் எடுபிடுகள் ?

டிஜிட்டல் திண்ணை:  தமிழக முதல்வராகும் அமித் ஷா?மின்னம்பலம் : அலுவலக வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப்பில் நிறைய செய்திகள் வந்து கொட்டின. முக்கியம் என்று அடையாளமிட்ட செய்தி நட்சத்திரக்குறியோடு வந்தது.
“அரசாங்க இயந்திரத்தின் இருபெரும் சக்கரங்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பிஎஸ். அதிகார மையங்கள்தான். மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினாலும், எந்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், ஐபிஎஸ் அதிகாரிகளும்தான்.
தமிழ்நாட்டில் கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயிக்க முடியாத பாஜக, அடுத்த சட்டமன்றத் தேர்தலின் மூலம் சட்டமன்றத்தில் நுழைவது என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்காக இப்போதே தமிழகத்தின் இரு பெரும் அதிகார மையங்களான டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய இரு பொறுப்புகளிலும் தான் விரும்புபவர்களையே நியமிக்கத் தயாராகிவிட்டது மத்திய பாஜக அரசு.

தமிழக டிஜிபி யான டி.கே. ராஜேந்திரனின் பதவிக் காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதியோடு முடிகிறது. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதனின் பதவிக் காலமும் ஜுன் மாதத்தோடு முடிகிறது. இந்தியாவின் முக்கியமான மாநிலமான தமிழ்நாட்டின் ஐபிஎஸ் தலைமையும், ஐ.ஏ.எஸ். தலைமையும் ஒரே நேரத்தில் ஓய்வுபெறும் நிலையில்,இந்த இரு தலைமைகளையும் பிடித்து, பாஜக மாநிலத்தில் நிழல் அரசு ஒன்றை நடத்தியாக வேண்டும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக இருக்கிறார்.
இதற்கான பணிகள் அமித் ஷா உள்துறை அமைச்சராக பணியேற்றதில் இருந்தே தொடங்கிவிட்டன. அதன்படி தமிழக டிஜிபி பதவிக்கு ஜே. கே. திரிபாதியையும், தலைமைச் செயலாளர் பதவிக்கு இப்போது ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளராக இருக்கும் ராஜகோபாலையும் செலக்ட் செய்திருக்கிறார் அமித் ஷா.
ஜே.கே. திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வேண்டிய நபர் பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார். மேலும் வீரப்பன் என்கவுன்ட்டர் புகழ் அதிகாரியான விஜயகுமார் ஐபிஎஸ்சும் திரிபாதிக்காக டெல்லியில் லாபி செய்தார் என்கிறார்கள். திரிபாதிதான் தமிழக டிஜிபி என முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மூன்று நாட்களுக்கு முன் தமிழக உள்துறைசெயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, திரிபாதியைத் தொடர்புகொண்டிருக்கிறார். ‘நீங்கதான் டிஜிபி ஆக போறீங்க. சிஎம்மை ஒரு தடவ போயி பார்த்துட்டு வந்துடுங்களேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு திரிபாதி, ‘நான் டிஜிபியாக அறிவிக்கப்பட்டுவிட்டால் புரோட்டால்படி சிஎம் மை போய் பார்க்கத்தான் போறேன். இப்பவே எதுக்கு பாக்கணும்? இப்ப போய் அவரைப் பார்த்தால் அவர் சொல்லிதான் டிஜிபி போஸ்ட் கிடைச்சதா ஆயிடாதா?’ என்று கேட்டு முதல்வரை பார்க்கச் செல்வதைத் தவிர்த்துவிட்டார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சொன்னதற்கும் திரிபாதி இப்படித்தான் பதிலளித்திருக்கிறார்.
தலைமைச் செயலாளர் பதவிக்கு மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட இருக்கும் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். இப்போது ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். ’தமிழ்நாடு ஆளுநருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அப்பதவியில் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்படுகிறார். ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி எனப்படுவது தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு நிகரானதாகும்’ என கடந்த 2017 நவம்பர் 28 ஆம் தேதி இரவு ஆளுநர் மாளிகை அரசாணை வெளியிட்டது. அப்போதே ஆளுநர் இணை அரசு நடத்துகிறாரா என்ற சர்ச்சை கிளம்பியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றதில் இருந்தே தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதற்கு ஆளுங்கட்சியை தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சட்டப்படிதான் ஆளுநர் ஆய்வுகளை நடத்துகிறார் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. அதேநேரம் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியபோது ஆளுநர் நேரடியாக களத்தில் இறங்க முடியாது என்பதும்... ஆனால், மாநில அரசின் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு இணையாக ஆளுநர் ஒரு தலைமைச் செயலாளரை தனக்கென வைத்துக் கொள்ளலாம் என்றும் சட்டத்தில் உள்ள ஓர் அம்சம் மத்திய அரசுத் தரப்புக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி... இந்திய ஆட்சிப் பணி சட்டம் 1954 -ன் 4(2) ன் படி ஆளுநருக்கு தலைமைச் செயலாளர் என்ற தற்காலிக பதவியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தச் செய்திகள் அப்போதே மின்னம்பலத்தில் போட்டி தலைமைச் செயலாளர் நியமனம்!என்ற தலைப்பில் வெளியானது.
இவ்வாறு ஏற்கனவே ஆளுநர் மாளிகை மூலம் நடத்திய நிர்வாகத்தை இன்னும் வீரியமாக கோட்டைக்கே வந்து நடத்துவதற்காகத்தான் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். தலைமைச் செயலாளர் பதவிக்குக் கொண்டுவரப்படுகிறார். இப்படி டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய தமிழக அரசின் இரு முக்கிய அதிகார மையங்களையும் பாஜக தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கைகள் முன்னைவிட இன்னும் இறுக்கமாகக் கட்டப்பட்டுவிடும் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய இருவரையும் தன் கையில் வைத்திருக்காவிட்டால் முதல்வர் என்ற பதவிக்கே அர்த்தம் இருக்காது. உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக இருப்பார். பாஜக அரசால் நியமிக்கப்படும் டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோர் மாநில அரசை விட மத்திய உள்துறையின் உத்தரவுப்படியே நடப்பார்கள். மாநில சுயாட்சியை முழங்கும் தமிழகத்தில்தான், மாநில சுயாட்சி அதிகபட்சம் முடக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுதான் இப்போது நடந்து வருகிறது என்றும் எச்சரிக்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்” என்ற செய்தியைப் படித்து முடித்தபோது லாக் அவுட் ஆகியிருந்தது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: