புதன், 26 ஜூன், 2019

நாடு முழுவதும் கல்லூரிகளில் இந்தி பாடம்: பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு


தினத்தந்தி :நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தி பாடத்தை கற்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புதுடெல்லி, சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என்று தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழியை அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்நிலையில், அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும் இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் முயற்சி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் உயர் கல்வியை நிர்வகிக்கும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) திகழ்ந்து வருகிறது. அந்த அமைப்பு, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் யு.ஜி.சி. எழுதியுள்ள கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளபடி, இங்கு தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால், இந்தி கற்பித்தல் தொடர்பான ஆலோசனைகள், அபிப்பிராயங்கள் பல்கலைக்கழகங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இப்போது கவனப்படுத்த விரும்புவது என்னவென்றால், பல்கலைக்கழகங்கள் யாவும் சுயாட்சி பெற்ற நிறுவனங்களாகும். அவர்கள் தங்கள் அதிகாரவரம்புக்குள் எந்த ஒரு பாடப்பிரிவையும் தேர்வு செய்து, எந்த விதத்தில் அதை போதிப்பது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது, இந்தியை திணிக்கும் மற்றொரு முயற்சியாக கருதப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சிகளும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேல்மட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாய பாடமாக திணிக்க யு.ஜி.சி. மேற்கொள்ளும் முயற்சி கவலை அளிக்கிறது. ஏற்கனவே புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த முயற்சி நடப்பது வினோதமாக இருக்கிறது.

இந்தியா, பல்வேறு மொழிகளையும், கலாசாரங்களையும் கொண்டது. ஒரு குறிப்பிட்ட மொழியை திணிக்க முயற்சிப்பது, மற்ற மொழி பேசுபவர்கள் இடையே போராட்டத்தை தூண்டி விடும். வேற்றுமையில்தான் நமது ஒற்றுமை அடங்கி இருக்கிறது. இந்தி மொழி திணிப்பு முயற்சி, நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து விடும். ஆகவே, அனைத்து தரப்பினரும், கல்வி அமைப்புகளும் மக்கள் கருத்தை திரட்டி, இந்த சுற்றறிக்கையை வாபஸ் பெற செய்ய நிர்ப்பந்திக்குமாறு வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல், டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், பேராசிரியர்களும் யு.ஜி.சி.யின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். யு.ஜி.சி.யின் சுற்றறிக்கை குறித்து விவாதிப்பதற்காக, நேரு பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.

கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், யு.ஜி.சி. செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

அந்த கடிதம், கருத்து கேட்பதற்காக சில பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது கட்டாய உத்தரவு அல்ல. இந்தியை கட்டாய பாடம் ஆக்க முடியுமா என்று மத்திய மந்திரி கேட்டதால், கருத்து கேட்பதற்காக மட்டுமே அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: